

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தூண்டுவிடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளில் இருந்து எங்கள் அரசு மாறுபட்டு செயல்படுகிறது. இதனால் தான் பல பிரச்சினைகளுக்கு எங்களால் தீர்வு காண முடிகிறது. அந்த அரசை போன்றே நாங்களும் செயல்பட்டிருந்தால் அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ஒருபோதும் ரத்து செய்யப்பட்டிருக்காது. முத்தலாக் காரணமாக முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
ராமஜென்ம பூமி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்திருக்கும். கர்த்தார்பூர்-சாஹிப் வழித்தடம் வந்திருக்காது. இந்தியா-வங்கதேசம் நில ஒப்பந்தம் வந்திருக்காது. மாற்று சிந்தனையும் தீர்வு காணும் எங்கள் எண்ணமும் தான் இன்று அனைத்திற்கும் தீர்வை தந்துள்ளது. உங்களைப் பொறுத்தவரை காந்தி வெறும் டிரைலர் தான். ஆனால் எங்களுக்கு அது வாழ்க்கை.
குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. முஸ்லிம்களின் நலன் பாதிக்கப்படும் என்ற பிரச்சாரத்தில் துளியும் உண்மை இல்லை. சிறுபான்மையினர் ஆதரவு என்ற பெயரில் காங்கிரஸ் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தூண்டுவிடுகிறது.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் போராட்டப்பகுதியில் மக்களை தூண்டிவிடுகின்றன. இந்த சட்டத்தால் இந்திய குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சிறுபான்மையினர் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தவறவிடாதீர்