பாதுகாப்பு கோரி முருகதாஸ் மனு: காவல்துறை விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பு கோரி முருகதாஸ் மனு: காவல்துறை விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

'தர்பார்' பட வெளியீட்டில் நஷ்டம் தொடர்பாக தனக்குத் தொடர்ந்து மிரட்டல் வருவதால் பாதுகாப்பு கேட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் வெளியான 'தர்பார்' படம் வெளியீட்டில் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் சிலர் கூறினர். இதனையடுத்து ரஜினி வீடு, லைகா அலுவலகம், தேனாம்பேட்டையில் உள்ள இயக்குநரின் முருகதாஸின் அலுவலகம், சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இல்லம் ஆகிய இடங்களுக்கு விநியோகஸ்தர்கள் சில கோரிக்கைகளுடன் சென்றனர்.

அவர்கள் சென்ற நேரம் இயக்குநர் முருகதாஸ் சினிமா படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்தார். இதனால் விநியோகஸ்தர்கள் ரஜினியின் இல்லத்திற்குச் சென்றனர். இந்நிலையில் தினமும் ஏ.ஆர்.முருகதாஸ் வீடு, அலுவலகத்துக்கு விநியோகஸ்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ''என் வீடு மற்றும் அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். எனக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். விநியோகஸ்தர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் எனது வீட்டை முற்றுகையிடுகின்றனர்'' என்று காவல்துறையில் மனு அளித்தார்.

காவல்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவரது மனுவில், “லைகா நிறுவனத்திற்காக 'தர்பார்' படத்தில் இயக்குநராக மட்டுமே நான் பணியாற்றியுள்ளேன். படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. மேலும், நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல் என்னை மிரட்டி வருகிறார்கள்” எனக் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

பிப்ரவரி 3-ம் தேதி முதல் இச்சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பிப்ரவரி 4-ம் தேதி காவல்துறைக்கு மனு அளித்ததாகவும், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முருகதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்தச் சம்பவங்கள் இரு வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்துள்ளதால், இதுகுறித்து விளக்கம் பெற்று பின்னர் தெரிவிப்பதாகக் கூறினர்.

இதை ஏற்ற நீதிபதி, முருகதாஸின் கோரிக்கை மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 10-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in