Last Updated : 04 Feb, 2020 09:07 AM

 

Published : 04 Feb 2020 09:07 AM
Last Updated : 04 Feb 2020 09:07 AM

மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்திப் பேச்சு: ஆனந்த் குமார் ஹெக்டே மீது பிரதமர் மோடி அதிருப்தி?

கர்நாடக மாநில எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே, நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்டத்தை ‘நாடகம்’ என்று வர்ணித்ததோடு 'எப்படி இவர்களையெல்லாம் மகாத்மா என்று அழைக்கிறோம்’ என்று மேலும் கொச்சைப்படுத்தியது பலரது விமர்சனங்களையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

இந்நிலையில் பாஜக தலைமை, பிரதமர் மோடி அனந்தகுமார் ஹெக்டே மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் மன்னிப்புக் கேட்க வைக்கப்படுவார் என்றும் பாஜக வட்டாரங்களைக் குறிப்பிட்டு பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.

அதாவது கட்சித் தலைமையின் அதிருப்தி அனந்தகுமார் ஹெக்டேவிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் ஹெக்டே இதற்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் பிடிஐ செய்திகள் கூறுகின்றன.

“சுதந்திர போராட்டத்தில் மூன்று வகையான குழுக்கள் இருந்தன. ஒரு குழுவினர் புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் ஆயுதங்களை கையில் எடுத்து போராடினர். மற்றொரு குழுவினர் சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு போராடினர். கடைசியில் இன்னொரு குழுவினர் உள்ளனர். அவர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் போட்டு கொண்டு போராடினர்.

இந்த குழுவினர் நேர்மையான முறையில் சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களிடம் அடி உதை வாங்கவில்லை. ஆனால் அவர்கள் வரலாற்று பக்கங்களில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் நமது நாட்டின் சுதந்திர போராட்டக்காரர்கள். பெங்களூரு இந்துத்துவா தலைநகராக மாற வேண்டும். இந்த உலகையே இந்துத்துவாவாக மாற்ற வேண்டும். சரியாக புரிந்துகொள்ள முடியாதவர்கள் தான் இந்துத்துவாவை எதிர்க்கிறார்கள். வரலாறு தெரியாத முட்டாள்கள் இந்த நாட்டில் உள்ளனர்.

பிரிட்டிஷார் வெறுப்பில்தான் சுதந்திரம் கொடுத்தனர், வரலாற்றைப் படிக்கும் போது என் ரத்தம் கொதிக்கிறது. இத்தகையவர்கள் நாட்டில் மகாத்மாவாகியுள்ளனர்” என்று பேசினார் அனந்தகுமார் ஹெக்டே.

பிரதமர் எப்படி இத்தகைய பேச்சுகளை அனுமதிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை எழுப்பியுள்ள நிலையில் மோடியே ஹெக்டே மீது அதிருப்தி கொண்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல்களைக் கொண்டு பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x