Published : 02 Feb 2020 07:21 AM
Last Updated : 02 Feb 2020 07:21 AM

பட்ஜெட் 2020: திருவள்ளுவர், அவ்வையாரை மேற்கோள் காட்டிய நிர்மலா

பட்ஜெட் உரையின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருவள்ளுவரின் திருக்குறள், அவ்வையாரின் ஆத்திச்சூடியில் இடம்பெற்றுள்ள வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.

நிர்மலா தனது பட்ஜெட் உரையில்அவ்வையாரின் பாடலை மேற்கொள் காட்டி பேசினார். விவசாயம் குறித்து கூறும்போது “பூமி திருத்தி உண்” என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும் அவர் கூறும்போது, “சுமார்3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண் கவிஞரான அவ்வையார், வேளாண்மை குறித்து மூன்றே வார்த்தையில் போதனைகளை வழங்கியுள்ளார். பூமி திருத்தி உண் என்ற ஆத்திச் சூடி பாடலுக்கு விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் என்பது பொருளாகும். இதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல் பட்டு வருகிறது” என்றார் அவர்.

பின்னர் அவர் பேசும்போது திருக்குறளை மேற்கோள் காட்டி மத்திய அரசு செய்த திட்டப் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ்வைந்து'' என்பது திருக்குறள். நோயின்மை, செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, பாதுகாப்பு குறித்து இந்த குறள் விளக்குகிறது.

இதில் பிணியின்மை என்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தையும், விளைவின்பம் என்பது விவசாயிகளின் வருமானம் இரட்டிப் பாக்கப்படும் என்பதையும், ஏமம் என்பதுநாட்டின் பாதுகாப்பையும் குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

காளிதாசர்

அதைப் போலவே மகாகவி காளிதாசர் எழுதிய ரகுவம்சம் நூலில் இருந்து சில வரிகளை மேற்கொள் காட்டிப் பேசினார். அவர் கூறும்போது, “சூரியனானது நீரை ஆவியாக்கி பின்னர் மழையாக நமக்குத் தருகிறது. அதைப் போலவே அரசனும், வசதி படைத்த மக்களிடமிருந்து வரியைப் பெற்று அதை திரும்ப மக்களுக்கே வழங்குகிறார் என்று ரகுவம்சம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் போலவே மோடி தலைமையிலான அரசும் செய்து வருகிறது” என்றார்.

தயாநிதி மாறன்

பட்ஜெட் உரையில் ஆத்திசூடியை மேற்கோள் காட்டி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் பேசும்போது, “குடியரசுத் தலைவர் உரையாற்றும் போது திருக்குறளைப் பற்றி குறிப்பிடுகிறார். பிரதமர் உரையாற்றும் போது திருக்குறளைப் பற்றி குறிப்பிடுகிறார். ஆனால் தமிழ் மொழிக்கு எதையும் நீங்கள் செய்வதில்லை, தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும் எந்த ஒரு முயற்சியையும் எடுப்பதில்லை” என ஆவேசமாக கூறினார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x