Last Updated : 30 Jan, 2020 03:30 PM

 

Published : 30 Jan 2020 03:30 PM
Last Updated : 30 Jan 2020 03:30 PM

டெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பிரச்சாரம் செய்யத் தடை: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோர் பிரச்சாரம் செய்யத் தடை விதித்துத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் 72 மணிநேரமும், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா 96 மணிநேரமும் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தேர்தல் ஆணையத்திடம் அளித்த விளக்கங்கள் மனநிறைவு அளிக்கவில்லை என்பதால், இந்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ம் தேதி நடக்கிறது. ரித்தாலா தொகுதியில் பாஜகவை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், ''தேசத்துரோகிகளைச் சுட்டுத் தள்ளவேண்டும்'' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள் வெளியாயின.

இதேபோல, டெல்லி மேற்கு தொகுதி எம்.பி. பர்வேஷ் வர்மாவும் தேர்தல் பிரச்சாரத்தில், ''குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள், வீடுகளுக்குள் புகுந்து கொலை செய்வார்கள். பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வார்கள்'' என்று பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா : படம் | ஏஎன்ஐ

விதிமுறைகளை மீறி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக இருவர் மீதும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் அனுராக் தாக்கூருக்கும், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மாவுக்கும் வியாழக்கிழமை முற்பகலுக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலில் இருந்தும் நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பாஜக எம்.பி.பர்வேஷ் வர்மாவும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்தனர். ஆனால், அவர்கள் அளித்த விளக்கம் தேர்தல் ஆணையத்துக்கு மனநிறைவு அளிக்காததால் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி மத்தி்ய அமைச்சர் அனுராக் தாக்கூர் 72 மணிநேரமும், பாஜக எம்.பி.பர்வேஷ் வர்மா 96 மணிநேரமும் டெல்லி தேர்தலில் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x