Last Updated : 30 Jan, 2020 03:10 PM

 

Published : 30 Jan 2020 03:10 PM
Last Updated : 30 Jan 2020 03:10 PM

கேரள மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது; சீனாவில் இருந்து திரும்பிய 1,050 பேரின் நிலை தீவிர கண்காணிப்பு- திரிபுரா இளைஞர் மலேசியாவில் உயிரிழப்பு

சீனாவில் இருந்து நாடு திரும்பிய கேரள மாணவி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக சீனாவில் இருந்து கேரளா வுக்கு திரும்பி வந்த 1,050 பேர் மருத் துவக் கண்காணிப்பில் வைக்கப்பட் டுள்ளனர். மலேசியாவில் பணியாற் றிய திரிபுரா இளைஞர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.

சீனாவின் ஹுபெய் மாகாண தலை நகர் வூஹானில் கடந்த டிசம்பரில் கரோனா வைரஸ் பரவத் தொடங் கியது. அடுத்த சில வாரங்களில் உயிரிழப்பு கணிசமாக அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக பொது போக்குவரத்து முடக்கப்பட் டது. வூஹான் மற்றும் சுற்றுவட்டார நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

சீனாவில் மொத்தம் 31 மாகாணங் கள் உள்ளன. அனைத்து மாகாணங் களிலும் கரோனா வைரஸ் பரவி யுள்ளது. சீனாவில் நேற்று ஒரே நாளில் 38 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால், உயி ரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. 8,000-க்கும் மேற் பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் பல ரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கரோனா வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு தரப்பில் ரூ.28,636 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மா சார்பில் ரூ.100 கோடி, பில் கேட்ஸ் அறக் கட்டளை சார்பில் ரூ.71 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மட்டுமின்றி பல நாடுகளி லும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஜப் பான், தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளில் சுமார் 100 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க சீனாவுடனான சுமார் 2,700 மைல் எல்லைப் பகுதிகளை ரஷ்யா நேற்று சீல் வைத்து மூடியது.

இந்தியாவில் முதல் நோயாளி

இந்தியாவை சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் சீனாவில் மருத்துவக் கல்வி பயின்று வருகின்ற னர். கரோனா வைரஸ் பரவத் தொடங் கியதும் அவர்கள் நாடு திரும்ப தொடங்கினர். இதன்படி சீனாவில் இருந்து சுமார் 1,050 பேர் கேரளா வுக்கு திரும்பி வந்துள்ளனர். அவர் கள் அனைவரும் மருத்துவக் கண் காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் காய்ச்சலால் பாதிக் கப்பட்ட 20 பேர் அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மருத் துவப் பரிசோதனையில் உறுதி செய் யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

காய்ச்சல் காரணமாக 20 பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய் தோம். இதில் 15 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 5 பேரில் ஒரு மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது வியாழக் கிழமை உறுதி செய்யப்பட்டது. திருச் சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்போதுவரை அந்த மாணவிக்கு பெரிதாக பாதிப்பில்லை. இதர 4 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பி வரும் அனைவரும் சுகா தாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யாருக்காவது கரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரள மாணவிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை மத்திய சுகாதாரத் துறையும் உறுதி செய்துள்ளது.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசியாவில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந் தார். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பெண் டாக்டருக்கு பரிசோதனை

சீனாவில் இருந்து ஹைதரா பாத் திரும்பிய பெண் டாக்டருக்கு விஜயவாடாவில் உள்ள அரசு மருத் துவமனையில் நேற்று மருத்துவப் பரி சோதனை நடத்தப்பட்டது. அவ ருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப் பட்டது. இந்த வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாவட்ட மருத்துவ அதிகாரி டிஎஸ்ஆர் மூர்த்தி தெரிவித்தார்.

ஆந்திராவை சேர்ந்த 58 பொறி யாளர்கள் சீனாவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மத்திய வெளி யுறவுத் துறையிடம் ஆந்திர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியர்களை மீட்க நடவடிக்கை

இந்தியாவை சேர்ந்த சுமார் 500 பேர் சீனாவின் ஹுபெய் மாகா ணத்தில் வசிக்கின்றனர். அவர்களை மீட்டு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஹுபெய் தலைநகர் வூஹானில் இருந்து 2 விமானங்களில் இந்தியர்களை மீட்டு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் இன்று இந்தியா திரும்புவார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் பணியாற்றும் சீன தூதரக அதிகாரி ஜி ரோங் கூறும் போது, "கரோனா வைரஸ் தொடர் பாக இந்திய அரசுடன் தொடர்பில் உள்ளோம். சீனாவில் இந்தியர்களின் பாதுகாப்பு, உடல்நிலையில் சீனா அக்கறை கொண்டுள்ளது. தேவை யான அனைத்து உதவிகளையும் சீனா வழங்கும்" என்று தெரிவித்தார்.

சொகுசு கப்பலில் 7,000 பேர் பரிதவிப்பு

இத்தாலியை சேர்ந்த சொகுசு கப்பல் கோஸ்டா சுமர்லடா. இது உலகின் 5-வது மிகப்பெரிய சொகுசு கப்பலாகும். இந்த கப்பலில் 6,000 பயணிகள், 1,000 ஊழியர்கள் உள்ளனர். இதில் 751 பேர் சீனர்கள். கடந்த ஒரு வாரமாக மேற்கு மத்திய தரைக்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளை சுற்றி வந்த சொகுசு கப்பல் தற்போது இத்தாலியின் சிவிடோவேகியா துறைமுகம் அருகே நங்கூரமிட்டுள்ளது.

இந்த கப்பலில் பயணம் செய்யும் சீனாவை சேர்ந்த 54 வயது பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் நேற்று முன்தினம் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. உடனடியாக இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கப்பலிலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவிடோவேகியா துறைமுக நிர்வாகம் சொகுசு கப்பல் துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி மறுத்துவிட்டது. அந்த கப்பல் துறைமுகத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது.

கரை திரும்ப முடியவில்லை என்ற கவலையைவிட கரோனா வைரஸ் தொற்றிவிடுமோ என்ற அச்சம் கப்பல் பயணிகளை வாட்டி வதைத்து வருகிறது. கப்பலில் உள்ள 7,000 பேரும் பரிதவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x