Last Updated : 27 Jan, 2020 01:08 PM

 

Published : 27 Jan 2020 01:08 PM
Last Updated : 27 Jan 2020 01:08 PM

சிஏஏ-வுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் விரைவி்ல் தீர்மானம்; உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்: இந்தியா கடும் கண்டனம்

பிரதிநிதித்துவப்படம் : ஐரோப்பிய யூனியன்

புதுடெல்லி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் எந்தவிதமான தீர்மானமும், விவாதமும் நடத்தக்கூடாது,அது முற்றிலும் எங்களின் உள்நாட்டு விவகாரம், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மூலம் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து 150-க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் இந்த சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த சூழலில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் இந்தியா நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவை ரத்து செய்தது குறித்தும் தீர்மானம் கொண்டுவந்து அடுத்த வாரம் விவாதிக்கப்பட உள்ளது.

ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உள்ள 751 உறுப்பினர்களில் 626 உறுப்பினர்கள் சேர்ந்து குடியுரிமைத்திருத்தச் சட்டம் மற்றும் காஷ்மீர் 370 பிரிவு ரத்து தொடர்பாக 6 தீர்மானங்களை முன்வைத்துள்ளார்கள். இந்த தீர்மானங்கள் அனைத்தும் வரும் புதன்கிழமை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

வரும் மார்ச் மாதம் பிரஸல்ஸ் நகரில் நடக்கும் இந்தியா-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும் நிலையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

ஐரோப்பிய யூனியனில் உள்ள சோசலி முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயகக் கட்சி(எஸ்&டி), ஐரோப்பிய மக்கள் கட்சி(கிறிஸ்துவ ஜனநாயகக்கட்சி), குரூப் ஆப்தி கிரீன்ஸ் ப்ரீ அலெயன்ஸ், ஐரோப்பிய பழமை வாதிகள் மற்றும் சீர்திருத்தக் குழு(ஈசிஆர்), ஐரோப்பியப் புதுமைக் குழு(ரிநியூ), ஐரோப்பிய யுனெடெட் லெப்ட், நார்டிக் க்ரீன் லெப்ட் குழு ஆகியவை 6 தீர்மானங்களை முன்வைத்துள்ளன.

இதற்கிடையே ஜியுஇ, என்ஜிஎல் குழு தனியாக ஒரு தீர்மானத்தை முன்வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட 370 பிரிவை ரத்து செய்தது குறித்து தீர்மானம் கொண்டுவர உள்ளது. இதுதொடர்பாக வரும் புதன்கிழமை பிரஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, மறுநாள் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த தீர்மானத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் மக்கள், குழுக்கள் ஆகியவற்றுடன் ஆக்கப்பூர்வமாகப் பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவில் குடியுரிமைத் தீர்மானிக்கும் விவகாரத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆபத்தான முறைக்குக் கொண்டுசெல்லும். உலகளவில் அதிகமானோர் நாடு இழந்து அதிகமானோர் வாழும் நாடாக இந்தியா மாறும், மனிதகுலம் மிகப்பெரிய பாதிப்பு உள்ளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள், மக்களின் குறைகளைக் களைவதற்குப் பதிலாக, பேச்சு நடத்துவதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படையினரை வைத்து போராட்டக்காரர்களை அடக்குவதும், போராட்டக்காரர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் நடக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என்று மத்திய அரசு கண்டித்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றம் கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஆதரவாக இருக்கும் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், இந்திய அரசுடன் பேசி, முழுமையான, துல்லியமான தகவல்களையும், உண்மைகளையும் அறிந்தபின் நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது முழுவதும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மூலம் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியுள்ளது.

ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒவ்வொருவிதமான, தங்களுக்கு உரியமுறையை அணுகுகின்றன. ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உள்ள நாடுகளும் இதே நடைமுறையைத்தான் பின்பற்றுகின்றன.

ஆதலால், ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் கொண்டுவந்து நிறைவேற்றிய சட்டத்தையும், அவர்களின் உரிமையையும் ஜனநாயகத்தை மதிக்கும் ஐரோப்பிய யூனியன் கேள்வி எழுப்பக்கூடாது என மத்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x