Published : 18 Jan 2020 08:08 am

Updated : 18 Jan 2020 08:08 am

 

Published : 18 Jan 2020 08:08 AM
Last Updated : 18 Jan 2020 08:08 AM

ஜேஎன்யுவில் அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தும் திமுக

dmk-in-jnu

புதுடெல்லி

அரசியல் ஆதிக்கம் அதிகமுள்ள உயர்கல்வி நிலையமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) திமுக தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக, இந்தி பேசாத மாநிலங்களில் முதல் கட்சியாக திமுக தனது மாணவர் அணியையும் அங்கு துவக்கி உள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகமான ஜேஎன்யுவில் கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் துவங்கியது. இதில், மாணவ அமைப்புகளுக்கு இடையே ஜனவரி 5-ல் ஏற்பட்ட மோதலில் வெளிநபர்களால் அங்கு தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த மாணவர்களை சந்திக்க பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் நேரில் வந்து செல்கின்றனர். இந்த சூழலில் திமுகவும் முதன்முறையாக ஜேஎன்யுவுக்கு தமது தலைவர்களை அனுப்பி அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்காக ஜேஎன்யுவில் புதிதாகத் துவக்கப்பட்ட திமுக மாணவர் அணியை அந்தக் கட்சி பயன்படுத்தி வருகிறது. இது, கடந்த டிசம்பர் 24-ல், திமுக மாணவர் அணி செயலாளரான சி.வி.எம்.பி. எழிலரசன் எம்எல்ஏவால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பாளரும் ஜேஎன்யுவின் இந்திய மொழிகள் மையத்தின் தமிழ்பாடப் பிரிவின் ஆய்வு மாணவருமான சு.அருண்குமார், திமுக தலைவர்களை அழைத்து அங்கு கூட்டம் நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் ஜேஎன்யுவில் பயிலும் தமிழர்களை விட மற்ற மாநில மாணவர்கள் அதிகம் பங்கேற்று வருகின்றனர்.

ஜேஎன்யுவில் தற்போது இடது, வலதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் அரசியல் நடவடிக்கைகள் மட்டுமே உள்ளன. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து படித்தாலும் அவர்களது பகுதிகளை சேர்ந்தப் பிரச்சினைகள் எதுவும் பேசப்படுவதில்லை என்ற ஒரு கருத்து அங்கு நிலவி வருகிறது.

இதன் பயிற்றுமொழி ஆங்கிலமாக இருப்பினும் மாணவர்களின் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றில் இந்தி மட்டுமே பேசப்படுகிறது. இதுபோன்ற நிலையை மாற்றும் முயற்சியில் தென் இந்தியாவின் முதல் கட்சியாகவும் திமுக அங்கு களமிறங்கியுள்ளது. இதனால், அதன் கூட்டங்களில் தமிழகத்தை விட மற்ற மாநில மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஜேஎன்யுவின் திமுக மாணவர் அணியின் அமைப்பாளரான சு.அருண்குமார் கூறும்போது, ‘18 வயதில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களுக்கு அரசியல் நடவடிக்கைகள் கூடாது எனக் கூற முடியாது. முற்போக்கு மாணவர்களாக இருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் பல்வேறு மாநிலப் பிரச்சினைகளை பேசவே இங்கு திமுக மாணவர் அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் காஷ்மீர் மாணவர்களிடமிருந்தும் அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

உதாரணமாக, உயர் வகுப்பினரில் பத்து சதவிகித இடஒதுக்கீட்டை மார்க்சிஸ்ட் ஆதரித்து விட்டதால் மாநிலங்களுக்கு எதிராக அதை எதிர்த்து இங்கு எவரும் குரல் எழுப்பவில்லை. தற்போதுள்ள நெருக்கடி நிலை நீங்கியவுடன் எங்கள் உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்தி மாநிலங்களுக்காக திமுக இங்கு குரல் கொடுக்கும்’ எனத் தெரிவித்தார்.

ஜேஎன்யுவில், திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா முதலாவதாக வந்திருந்தார். தொடர்ந்து, எம்.பி.க்களான கனிமொழி மற்றும் கலாநிதி வீராசாமி, திமுக இளைஞரணியைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏக்களில் எழிலரசன் மற்றும் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலரும் வந்து சென்றுள்ளனர். எனினும், தற்போதைய போராட்டங்களில் அனைத்து அமைப்பினரும் ஜேஎன்யு மாணவர் பேரவையின் கீழ் ஒன்றிணைந்தே நடத்துவது குறிப்பிடத்தக்கது.


DMK in JNஜேஎன்யுஅரசியல் நடவடிக்கைதிமுக

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author