Last Updated : 10 Jan, 2020 07:37 PM

 

Published : 10 Jan 2020 07:37 PM
Last Updated : 10 Jan 2020 07:37 PM

ஜே.என்.யு. வன்முறை: சந்தேக நபர்கள் ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தகவல் 

ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் ஒன்பது நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுங்களுடன் புகுந்த மர்ம நபர்கள், பல்கலைக்கழக மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்க தலைவி உள்பட 33 பேர் காயம் அடைந்தனர். இதை கண்டித்து நாடுமுழுவதும் மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் வன்முறை நடந்து 4 நாட்கள் ஆகியுள்ள போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும், டெல்லி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் தொடர்புடையவர்கள் பிடிபடுவார்கள் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்தநிலையில், ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டது.

இது தொடர்பாக துணை ஆணையர் ஜாய் டிர்கி கூறும்போது, “அடையாளம் காணப்பட்டவர்களில் சுஞ்சுன் குமார், பங்கஜ் மிஸ்ரா, ஆயிஷ் கோஷ் (ஜே.என்.யு.எஸ்.யூ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்), வாஸ்கர் விஜய், சுசேதா தாலுக்ராஜ், பிரியா ரஞ்சன், டோலன் சாவந்த், யோகேந்திர பரத்வாஜ், விகாஸ் படேல் ஆகியோர் அடங்குவர்” என்றார்.

ஆனால் இந்த 9 பேர்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவைக் குற்றம்சாட்டும் ஏபிவிபி நபர்கள் யாரும் இல்லை, ஜாய் டிர்கி அந்த அமைப்பின் பெயரைக்கூட கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாய் டிர்கி மற்றும் டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் மந்தீப் ரந்தவா, ஸ்டூடன்ட்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்.எப்.ஐ) என்பதை ஸ்டூடண்ட்ஸ் ஃபிரண்ட் என்று இருமுறை தவறாகக் கூறினர்.

ஊடகங்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்த பிறகு டிசிபி ஜாய் டிர்கி, உடனடியாக தன் கார் நோக்கி விரைந்தார், செய்தியாளர்கள் கேள்விகளை அவர் எதிர்கொள்வதைத் தவிர்த்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x