Last Updated : 09 Jan, 2020 07:38 PM

 

Published : 09 Jan 2020 07:38 PM
Last Updated : 09 Jan 2020 07:38 PM

‘குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கிறீர்களா? நீங்கள் இந்தியர்கள் அல்ல’, பாகிஸ்தான் செல்லுங்கள்: கர்நாடகா கல்லூரியில் மாணவிகளிடம் பாஜகவினர் கூச்சல்

பெங்களூரு, கொரமங்கலாவில் உள்ள ஜோதி நிவாஸ் கல்லூரியில் பாஜக தொண்டர்கள் புகுந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்குமாறு கோஷமிட்டனர். கல்லூரி வளாகத்துக்கு வெளியே இவர்கள் ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்ற கோஷத்துடன் கல்லூரி சுவற்றில் ‘இந்தியா சப்போர்ட்ஸ் சிஏஏ’ என்ற போஸ்டரை ஒட்ட கல்லூரி மாணவிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பாஜக தொண்டர்களின் இந்தக் கூச்சல் பற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி சூடான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இதனையடுத்து கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த விவகாரத்தை நிச்சயம் விசாரிப்போம் என்று உறுதியளித்தனர்,

உள்ளூர் பாஜக தலைவர் எம்.எம். கோவிந்தராஜின் ஆதரவாளர்களான பாஜக தொண்டர்கள் ஜோதி நிவாஸ் கல்லூரியின் சுவற்றில் ‘இந்தியா சப்போர்ட்ஸ் சிஏஏ’ என்ற போஸ்டரை ஒட்டினர்.

இதனை மாணவிகள் எதிர்த்தனர். கல்லூரி சொத்தில் இப்படி போஸ்டர் ஒட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்றனர். இதனையடுத்து மாணவர்களை நோக்கி பாஜகவினர் கோஷம் போட்டனர்.

“நீங்கள் குடிஉரிமை பற்றி அக்கறை கொள்ளவில்லையா? உங்களுக்கு நீங்கள்தான் முக்கியம் இல்லையா. முதலில் இந்தியா பற்றி கவலைப்படுங்கள், இல்லையெனில் நீங்கள் இந்தியர்கள் அல்ல” என்று மாணவிகளிடம் பாஜக தொண்டர் ஒருவர் காட்டுக்கூச்சலிட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் மாணவிகளை நோக்கி, “சிஏஏ மீதான உங்கள் பிரச்சினை என்ன? நீங்கள் என்ன கல்லூரி உரிமையாளரா?” என்று அந்த பாஜக தொண்டர் கேட்டதும் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து சூடான விவாதம் எழ, பாஜக தொண்டர்கள் ‘வீ வாண்ட் சிஏஏ’ ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்று கோஷமிட்டனர்.

இதனையடுத்து மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குல் அரசியலை நுழைக்காதீர்கள் என்று போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் கல்லூரிகளை போர் மண்டலமாக மாற்றாதீர்கள், சிஏஏவுக்கு நோ-தான். உங்கள் கருத்தை எங்கள் மீது திணிக்கப் பார்க்கிறீர்களா? என்று வாசகங்கள் அடங்கிய பதாகையை சுமந்து போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

இந்தச் சம்பவம் குறித்து துணை முதல்வர் டாக்டர் சி.என்.அஷ்வத் நாராயண் கூறும்போது, மாணவர்கள் முதலில் போலீஸில் புகார் அளித்திருக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் சிஏஏ குறித்த விழிப்புணர்வைத்தான் மேற்கொண்டனர். உண்மைகள் திரிக்கப்படுகின்றன. எனவே இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், மாணவர்கள் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

எதிர்ப்பவர்கள் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். இப்படியே தேசத்தை அவமதிக்கும் செயலைச் செய்து வந்தால் மக்கள் அவர்களுக்குப் பாடம் கற்பிப்பார்கள் என்றார் காட்டமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x