Published : 21 May 2014 09:11 AM
Last Updated : 21 May 2014 09:11 AM

நாடாளுமன்ற பாஜக கூட்டத்தில் விஜயகாந்துக்கு தனி மரியாதை

நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தனி மரியாதை அளிக்கப்பட்டது.

இவர்களை வரவேற்று பேசிய பாஜகவின் தேசிய தலைவரான ராஜ்நாத்சிங், விஜயகாந்தின் பெயரைக் குறிப்பிடும்போது ‘உங்கள் மனைவி பிரேமலதா வந்திருக்கிறார்களா? எனக் கேட்டு அவர் அமர்ந்திருந்த இடத்தை பார்த்தார். பிரேமலதாவும் எழுந்து ராஜ்நாத்தை கைகூப்பி வணங்கினார்.

அதேபோல் நரேந்திர மோடியும் தனது ஏற்புரையின்போது, ‘விஜயகாந்த் ஜி, எங்கே உங்கள் மனைவி பிரேமலதா ஜி?’ எனக் கேட்டு அனைவரின் முன்னிலை யிலும் தனி அங்கீகாரம் அளித்துப் பாராட்டினார். அப்போதும் கூட்டத்தினரி டையே அமர்ந்திருந்த பிரேமலதா எழுந்து நின்று மோடியை வணங்கினார்.

இந்தக் கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமியையும் தனிப்பட்ட முறையில் மோடி வெகுவாகப் புகழ்ந்தார். இது குறித்து ‘தி இந்து’விடம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக வட்டாரங்கள் கூறியபோது, ‘பாஜகவும், என்.ஆர். காங்கிரஸும் வேறு, வேறு அல்ல என மோடி மறைமுகமாக உணர்த்தியுள்ளார். தமிழகத்தில் திருநாவுக்கரசர் நடத்தி வந்த ‘எம்.ஜி.ஆர். அதிமுக’வை கலைத்துவிட்டு பாஜகவில் இணைத்ததுபோல் கூட்டணி கட்சிகளையும் பாஜகவில் இணைக்க மோடி விரும்புகிறார். இதில் அவரின் கூர்மையான அரசியல் முதிர்ச்சியைப் பார்க்க முடிகிறது’ என தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி களை வரவேற்று பேசிய ராஜ்நாத் சிங், ‘பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி’ எனக் குறிப்பிட்டார். முன்வரிசையில் அமர்ந்திருந்த அன்புமணி எழுந்து, ‘ஜி.கே.மணி அல்ல அன்புமணி’ என திருத்தம் செய்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால் அவருக்குப் பதிலாக முன்னாள் எம்பி கணேசமூர்த்தி கலந்து கொண்டார். புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x