Last Updated : 06 Jan, 2020 09:23 PM

 

Published : 06 Jan 2020 09:23 PM
Last Updated : 06 Jan 2020 09:23 PM

என்னுடைய வீழ்ச்சிக்கு கிரெக் சாப்பலைக் குறை கூறுவதெல்லாம் சும்மா... வெற்றிக்குப் பிறகு நான் நீக்கப்பட்டேன்: இர்பான் பத்தான் 

தன் பந்து வீச்சில் ஸ்விங் போய் விட்டது, டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அனைத்து வடிவங்களிலும் விளையாடுவதில் தனக்கு நாட்டமில்லை போன்ற குற்றச்சாட்டுகளை ஓய்வு அறிவித்த இர்பான் பத்தான் மறுத்துள்ளார்.

சனிக்கிழமையன்று இர்பான் பத்தான் ஓய்வு அறிவித்தார், அப்போது மிகவும் மனவருத்தத்தோடு கூறிய போது, “27-28 வயதில் இந்திய அணிக்காக ஆடவரும் நிலையில் நான் என் கடைசி போட்டியை அதே வயதில் இந்தியாவுக்காக ஆடினேன்” என்றார்.

இந்நிலையில் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், விவாதங்கள் குறித்து இர்பான் பத்தான் கூறும்போது, “இந்த விவாதங்கள், கிரெக் சாப்பல் மீது பழிபோடுவதெல்லாம் சும்மா... மறைப்பு வழிமுறைகள். இர்பானுக்கு ஆர்வம் போய் விட்டது போன்ற கருத்தெல்லாம் வேறு எங்கிருந்தோ வந்தது. ஸ்விங் போய் விட்டது, 10 ஓவர்களுக்கு பிறகு எனக்கு ஸ்விங் ஆகாது இவையெல்லாம் ஒன்றுமில்லை நான் இப்போதும் ஸ்விங் செய்து கொண்டுதான் இருக்கிறேன்” என்றார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம்.

“மக்கள் என் ஆட்டத்திறன் பற்றி பேசுகிறார்கள், ஆனால் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்ன தெரியுமா, முதல் சேஞ்ச் பவுலராக நான் ரன்களை கட்டுப்படுத்தவே அறிவுறுத்தப்பட்டேன். இதுதான் உன் வேலை என்றனர். 2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராகப் போட்டியை வென்றோம் ஆனால் அடுத்தப் போட்டியில் நான் உட்கார வைக்கப்பட்டேன், அணிக்காக வெற்றி பெற்றுக் கொடுத்த பிறகு யார் நீக்கப்படுவார்கள்? அதுவும் காரணமில்லாமல்..

அதே போல் அனைத்து வடிவங்களிலும் நான் ஆட சுவாரசியம் காட்டவில்லை என்கின்றனர், அது எப்படி ஒரு கிரிக்கெட் வீரர் எந்த வடிவங்களிலெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த வடிவங்களில் ஆடவே ஆசைப்படுவார்கள்.

2009-2010-ம் ஆண்டில் எனக்கு முதுகில் 5 எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில்தான் என் பந்து வீச்சு வேகம் குறைந்தது, காரணம் நான் முழு உடல்தகுதி பெறவில்லை. கிரிக்கெட் ஆட்டத்தின் மீதுள்ள ஆர்வம், சிகப்புப் பந்து என் கையிலிருந்து செல்வதை உணரும் ஆசையினால் ஆடினேன்.

ஒரு கட்டத்தில் 9 போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடினேன், ஒரு சதம் அடித்தேன் ஒரு போட்டியில் 25 ஒவர்கள் வீசினேன், காரணம் என்ன நாட்டுக்காக ஆடவேண்டும் என்பதே, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்பதே” என்ற இர்பான் பத்தான், தனக்குப் பிடித்த கேப்டன்களாக கங்குலி, திராவிட், அனில் கும்ப்ளே ஆகியோரைக் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x