Last Updated : 03 Jan, 2020 05:52 PM

 

Published : 03 Jan 2020 05:52 PM
Last Updated : 03 Jan 2020 05:52 PM

சாவர்க்கருக்கு எதிராக புதிய நூல்: காங்கிரஸ் மீது சிவசேனா, பாஜக பாய்ச்சல்

வீர சாவர்க்கருக்கு எதிராகவும், அவதூறாகவும் சேவா தளம் வெளியிட்ட புதிய நூலால் அதிருப்தி அடைந்த சிவசேனா கட்சியும், பாஜகவும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளன..

அந்த நூலில் மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதூராம் கோட்சேவுக்கும், சாவர்க்கருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆதரவு பெற்ற சேவா தளம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த நூலை வெளியிட்டதால், சிவசேனா கட்சியும், பாஜகவும் கடும் அதிருப்தியில் இருக்கின்றன.

காங்கிரஸ் ஆதரவு பெற்ற சேவா தளம் வெளியிட்ட அந்த நூலில், "வீர சாவர்க்கருக்கும் நாதூராம் கோட்சேவுக்கும் நெருங்கிய நட்புறவு இருந்தது என்றும், அந்தமான் சிறையில் இருந்து சாவர்க்கர் வெளியே வந்தபின், ஆங்கிலேயரிடம் இருந்து உதவித்தொகை பெற்று வந்தார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாவர்க்கர் குறித்து அவதூறாக வெளியிட்ட நூல் குறித்து சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறுகையில், " வீர சாவர்க்கர் மிகப்பெரிய மனிதர். இன்னும் மிகப்பெரிய மனிதராகவே இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அவருக்கு எதிராகப் பேசி வருகின்றனர். இது அவர்களின் மனதில் அழுக்கு இருப்பதையே காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர பாஜக பொதுச்செயலாளர் அனில் ஜெயின் நிருபர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் கட்சிக்கு எங்கெல்லாம் தொடர்பு இருந்தது என்று உலகிற்குத் தெரியும். ஆனால், அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. சாவர்க்கர் அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் யாரும் பாதிக்கப்பட்டு இருக்க முடியாது. ஆனால் இந்தத்துவாவின் அடையாளமான அவரை எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றன" எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், "சாவர்க்கர் குறித்து மோசமான கருத்துகளைக் கொண்ட அந்த புத்தகத்துக்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும். அந்த நூலில் சாவர்க்கர் குறித்து பொய்யான தகவல்களும், அவதூறுகளும் இருக்கின்றன. காந்தியின் கொலை வழக்கில் இருந்து சாவர்க்கரை நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. ஆனால் கொலைக் குற்றவாளியுடன் சாவர்க்கரை தொடர்புபடுத்துகிறது காங்கிரஸ் கட்சி" எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், "சாவர்க்கரின் தியாகத்தை எத்தனை ஆண்டுகளுக்கு இவ்வாறு உதாசினப்படுத்துவார்கள். மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தேசப்பற்று மிகுந்த அந்த மாநில மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x