Published : 28 Dec 2019 12:27 PM
Last Updated : 28 Dec 2019 12:27 PM

வாரத்தில் 12, மாதத்தில் 77, இந்த ஆண்டில் 940: ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு விகிதம்

ராஜஸ்தான் மாநிலத்தின் கோடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த வாரத்தில் மட்டும் 12 குழந்தைகள் இறந்துள்ளன. இதில் வெள்ளிக்கிழமையன்று 2 குழந்தைகள் இறந்ததும் அடங்கும். இதனையடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்கக் கோரி அவருக்கு நெருக்கடி அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜேகே லோன் மருத்துவமனையைச் சேர்ந்த சூப்பரின்டென்டன்ட் அறிக்கையின் படி இந்த மாதத்தில் மட்டும் 24ம் தேதி வரை மொத்தம் 77 குழந்தைகள் இறந்துள்ளன. 2019-ல் மட்டும் 940 குழந்தைகள் இறந்து போயுள்ளன.

ஆனால் இந்த மரணங்களை ‘வழக்கத்துக்கு விரோதமானது அல்ல’ என்று இதே அறிக்கை தெரிவிக்கிறது, அப்படியென்றால் குழந்தைகள் இறப்பது அங்கு சர்வசகஜம் என்ற நிலையே இருந்து வருகிறது, இது அங்கு பணியாற்றும் ஊழியர்களைக் கூட குழந்தைகளின் இறப்பு என்ற கொடூரத்தை சகஜமாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு உணர்வற்றவர்களாக மாற்றியுள்ளதையடுத்து சுகாதாரச் செயலரை அழைத்து முதல்வர் கெலாட் உடனடியாக இதனை விசாரிக்கப் பணித்தார்.

அவர் 3 நபர் குழுவை அமைத்து இறப்புகள் ஏன் என்பதை விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார், மேலும் இந்த அறிக்கையை 48 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 23 மற்றும் 24ம் தேதி இறந்த 10 குழந்தைகளில் 5 பேர் பிறந்த குழந்தைகள், மீதி 5 பேர் ஒரு வயதுள்ள குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதிய ஆக்சிஜன் சப்ளை இன்மை, வார்டுகளில் நோய்க்கிருமிகளை சுத்தம் செய்து விரட்டாத தேக்க நிலை, உள்ளிட்ட காரணங்கள் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன, படுமோசமான உள்கட்டமைப்பு வசதிகளும் தெரிய வந்துள்ளது.

என்செபலோபதி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளை ஆக்சிஜனை சரிவர பெற முடியாமல் போவதால் செப்டிசீமியா ஏற்பட்டு குழந்தைகள் இறக்கின்றனர். நியுமோனியா, இருதய நோய் போன்றவற்றினால் கூட குழந்தைகள் இறக்கின்றன.

மாவட்ட ஆட்சியரோ மருத்துவமனைக்கு வக்காலத்து வாங்கும் வகையில் சமீபத்தில் இறந்த 10 குழந்தைகளும் மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர், அதனால் துரதிர்ஷ்டவசமாகக் காப்பாற்ற முடியாமல் போனது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x