Last Updated : 27 Dec, 2019 10:49 AM

 

Published : 27 Dec 2019 10:49 AM
Last Updated : 27 Dec 2019 10:49 AM

முஸ்லிம்  மணமகன், குடும்பத்தினரை திருமணத்துக்காக பாதுகாப்பாக அழைத்துச் சென்ற இந்துக்கள்: உ.பி.யில் நெகிழ்ச்சி

படம்: ட்விட்டர்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்து வன்முறைக் களமாக உத்தரப் பிரதேச மாநிலம் மாறியுள்ள நிலையில் மதநல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் வலியுறுத்தும் நெகிழ்ச்சிச் சம்பவம் ஒன்று அங்கு மக்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.

கான்பூர் நகரம் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வன்முறைக்கு இரையாகி வரும் தருணத்தில் இந்து வாலிபர் ஒருவர் தன் நண்பர்களுடன் மனிதச் சங்கிலி அமைத்து, முஸ்லிம் மணமகன் மற்றும் அவரது உறவினர்களை பாதுகாப்பாக திருமண வைபவத்துக்கு அழைத்துச் சென்றது பலருக்கும் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

திருமண நிகழ்ச்சி நடக்குமா நடக்காதா என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தனர் கான் குடும்பத்தினர். காரணம்க் ஊரடங்கு உத்தரவு, அதையும் தாண்டிய வன்முறை திருமணத்தையே தள்ளிவைக்கலாம் என்ற முடிவுக்கு கான் குடும்பத்தினரை இட்டுச் சென்றது.

ஆனால் அப்போதுதான் மணமகனின் அண்டை வீட்டில் குடியிருக்கும் விமல் சபாத்யா என்ற நபர் கான் குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க ஆபத்பாந்தனாக வந்தார். கான் குடும்பத்துக்கு உதவ முன்வந்தார்.

சபாத்யாவின் நண்பர்கள் சோம்நாத் திவாரி, நீரஜ் திவாரி ஆகியோர் தங்களது நண்பர்களை அழைத்து மனிதச் சங்கிலி அமைத்து சுமார் 70 பேர் அடங்கிய முஸ்லிம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை பகார்கஞ்சிலிருந்து திருமணம் நடைபெறும் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பாதுகாப்பாக அழைத்துச் சென்ற இந்துக்கள் திருமணம் முடியும் வரை அங்கு இருந்து முடிந்த பிறகு அதே மனிதச் சங்கிலி அமைத்து பாதுகாப்பாக மணமக்களை வீடு வரைக்கும் அழைத்து வந்தனர்.

தனியார் பள்ளி ஒன்றில் நிர்வாகியாக இருக்கும் சபாத்யா, தனக்கு எது சரி என்று பட்டதோ அதைத்தான் செய்ததாக செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்

“மணமகள் ஜீனத்தை சிறுபிராயம் முதல் அவர் வளர்ந்து வந்ததை பார்த்தவன் நான், அவர் என் இளைய சகோதரி போன்றவர், திருமணம் ஒத்தி வைக்கப்படுவதன் மூலம் அல்லது வேறு அசம்பாவிதங்கள் மூலம் ஜீனத்தின் இருதயம் உடைந்து போவதை நான் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? நாங்கள் அண்டை வீட்டார்கள் அவரது குடும்பத்திற்கு இன்றைய கஷ்டச் சூழலில் பாதுகாப்பாக இருக்க முடிவு செய்தோம்” என்றார்.

மணமகள் ஜீனத்தும் தன் நன்றியைப் பதிவு செய்யும் விதமாக விமல் சபாத்யா என் சகோதரர். அவர் செய்த மாபெரும் உதவியை ஒருநாளும் மறக்க மாட்டோம், என்றார்.

இந்த நிகழ்ச்சி கலவர பூமியில் பெரிய நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x