Last Updated : 24 Dec, 2019 02:17 PM

 

Published : 24 Dec 2019 02:17 PM
Last Updated : 24 Dec 2019 02:17 PM

என்ஆர்சி விவகாரத்தில் மோடியும் அமித் ஷாவும் முரண்பட்ட கருத்து: மம்தா பானர்ஜி விமர்சனம்

கொல்கத்தாவில் என்ஆர்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இன்று பேரணி நடத்திய முதல்வர் மம்தா பானர்ஜி : படம் | ஏஎன்ஐ.

கொல்கத்தா,

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள், வன்முறைகள், தீ வைப்பு சம்பவங்கள் நடந்த நிலையில், தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது.

என்ஆர்சியையும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் மேற்கு வங்க மாநிலத்தில் நடைமுறைப்படுத்த விடமாட்டேன் என்று மக்களிடம் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கொல்கத்தாவில் மட்டும் மம்தா பானர்ஜி இதுவரை 4 முறை மக்களைத் திரட்டி பேரணிகள் நடத்தியுள்ளார்.

மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள திரிணமூல் காங்கிரஸ் அரசு, ஊடகங்களிலும், நாளேடுகளிலும் அந்தச் சட்டத்துக்கு எதிராக விளம்பரம் செய்திருந்தது.

ஆனால், அந்த விளம்பரங்களை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக வெளியிடப்பட உள்ள அனைத்து விளம்பரங்களுக்கும் தடை விதித்தது.

இந்நிலையில், கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடந்தது. கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா சிலையில் இருந்து, காந்திபவன் வரை இந்தப் பேரணி நடந்தது.

இந்தப் பேரணி முடிவில் முதல்வர் மம்தா பானர்ஜி மக்களிடம் பேசுகையில், "என்ஆர்சி விவகாரத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முரண்பட்ட கருத்துகளைப் பேசுகிறார்கள். அகங்காரத்துடன் செயல்பட்டு வந்த பாஜகவுக்கு ஜார்க்கண்ட் மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகச்சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள்.

என்ஆர்சி குறித்து இதுவரை எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக எந்த விதமான தீர்மானமும் எடுக்கவில்லை என்று மோடி பேசினார். ஆனால், சில நாட்களுக்கு முன், பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசுகையில், என்ஆர்சி நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

இருவரின் கருத்துகளும் முரண்பட்டதாக இருக்கிறது. இருவர் பேசுவதில் எது உண்மை என்பது தெரியவில்லை. நாட்டைப் பிளவுபடுத்த பாஜக முயல்கிறது. ஆனால், அதை மக்கள் நடக்கவிட மாட்டார்கள்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x