Published : 20 Dec 2019 15:26 pm

Updated : 20 Dec 2019 15:38 pm

 

Published : 20 Dec 2019 03:26 PM
Last Updated : 20 Dec 2019 03:38 PM

நிர்பயாவின் நண்பர் வாக்குமூலத்தில் சந்தேகம்: குற்றவாளியின் தந்தை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

delhi-court-reserves-order-on-plea-seeking-fir-against-sole-witness-on-nirbhaya-case
பிரதிநிதித்துவப் படம்.

நிர்பயா பலாத்கார வழக்கில் உள்ள ஒரே சாட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி மரண தண்டனை குற்றவாளிகளில் ஒருவரின் தந்தை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை டெல்லி நீதிமன்றம் ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் வினய் சர்மா, முகேஷ், பவன், அக்ஷய் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.


பவன் குமார் குப்தாவைத் தவிர, அக்‌ஷய், வினய், முகேஷ் ஆகிய மூன்று பேரும் இந்த வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்கொள்கின்றனர். பிரதான குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில் மற்றொரு குற்றவாளி ஒரு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்து உத்தரவிட்டது. நீதிபதி ஆர்.பானுமதி மற்றும் அஷோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு மீது கடந்த புதன்கிழமை அன்று விசாரித்து தீர்ப்பை வழங்கியது.

இதனிடையே, உச்ச நீதிமன்றம் அனைத்துக் குற்றவாளிகளின் மறு ஆய்வு மனுக்களையும் நிராகரித்துள்ளதால் ''தூக்கு தண்டனையிலிருந்து விலக்கு பெற குடியரசுத் தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்ய தாங்கள் விரும்புகிறீர்களா'' எனத் தெரிவிக்க வேண்டி ஒரு வார கால நோட்டீஸ் அளிக்குமாறு நிர்பயா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறை அதிகாரிகளுக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

குற்றவாளிகளை விடுவிக்கும் கருணை மனு குறித்து வாய்ப்பு அளிக்கப்பட்டதை அறிந்தபோது, நிர்பயாவின் தயார் ஆஷா தேவி நீதிமன்ற அறையிலேயே அழத் தொடங்கினார். ''குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து எங்களிடம் கூறப்படுகிறது. ஆனால், ஏழு ஆண்டு காலமாக நாங்கள் நீதிக்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் எங்கு செல்வது'' என்று அவர் அப்போது கேட்டார்.

நேரில் கண்ட ஒரே சாட்சி

இவ்வழக்கில், டிசம்பர் 16, 2012 அன்று ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவியை ஆறு ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்தபோது நேரில் கண்ட உயிரிழந்த நிர்பயாவின் நண்பர் இவ்வழக்கு விசாரணையின்போது ஒரே சாட்சியாக வந்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளி பவன் குமார் குப்தின் தந்தை தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

''நிர்பயாவின் நண்பர் வாக்குமூலம் பொய்யானது. அவர் நீதிமன்றத்தில் தவறான சாட்சியம் அளித்துள்ளார். எனவே, அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அவர் சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும், பேருந்தில் நிர்பயாவுடன் வந்த இளைஞர் நேர்காணல்களை வழங்குவதற்காக சேனல்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு தான் நேரில் கண்டதாக சில பொய்யான செய்திகளைக் கூறி அவர், வழக்கை ஒரு ஊடக விசாரணையாக மாற்றியுள்ளார்.

அவருக்குப் பின்னால் யாரோ அவரை வழிநடத்துகின்னர். இவ்வழக்கில் ஒரே சாட்சியாக அவர் இருப்பதால், அவரிடம் ஒரு புலனாய்வு விசாரணையை நடத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. அவரது சாட்சியம் வழக்கின் முடிவை கடுமையாகப் பாதித்துள்ளது''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பெருநகர நீதிபதி சுதிர் குமார் சிரோஹி இதே வழக்கில் கடந்த விசாரணையின்போது, ''நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணத்தின் கீழ் அளிக்கும் வாக்குமூலங்கள் சாட்சியாகப் பதிவு செய்யப்படும், மற்றபடி அவர்கள் நீதிமன்ற அறைக்கு வெளியே என்ன சொன்னாலும் அவர்களை ஒரு சாட்சியாகக் கருதி அவர்களின் நம்பகத்தன்மையில் ஒரு கேள்வியை எழுப்ப முடியாது'' என்றார்.

வழக்கை விசாரித்து வரும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை குற்றவாளியின் தந்தை தாக்கல் செய்த மனுவின் மீதான உத்தரவை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


நிர்பயா வழக்குநீதிமன்ற வாக்குமூலம்நிர்பயாவின் நண்பரின் வாக்குமூலம்தூக்கு தண்டனை குற்றவாளிகள்டெல்லி சிறப்பு நீதிமன்றம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x