Published : 13 Dec 2019 10:44 AM
Last Updated : 13 Dec 2019 10:44 AM

ஜார்க்கண்டில் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி: ராகுல் உறுதி

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான (ஆர்.ஜே.டி.) காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு வாக்களித்தால் 2 லட்சம் ரூபாய் வரை விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஜ்மஹால் தொகுதியில் வரும் 2019 டிசம்பர் 20 அன்று கடைசிக் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ஜேஎம்எம் கட்சி வேட்பாளர் கெடுப்புதின் ஷேக்கிற்காக பிரச்சாரம் செய்தார் ராகுல் காந்தி. அப்போது பேசிய அவர், காங்கிரஸ்-ஜேஎம்எம்-ஆர்.ஜே.டி. கூட்டணியானது ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு 100 கிலோ நெல்லுக்கு ரூ. 2,500 குறைந்தபட்ச ஆதார விலையாக அளிக்கப்படும் என்றார்.

இது குறித்து பேசுகையில், “விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்வதையே எங்களுடைய பிரதான நோக்கமாக கொண்டிருக்கிறோம். சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும் காங்கிரஸ் அரசு அங்குள்ள விவசாயிகளுக்கு ரூ. 2,500 குறைந்தபட்ச ஆதார விலையாக அளித்துவருகிறது. ஆகையால் ஜார்க்கண்டிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் இங்குள்ள விவசாயிகளுக்கும் இதே தொகை கட்டாயம் வழங்கப்படும்” என்றார்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் கட்சியாக காங்கிரஸ் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது என்றவர், பாஜக தலைமையிலான ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாகவும் கூறினார்.

கிட்டத்தட்ட10 நிமிடங்கள் வரை பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி இறுதியாகப் பேசுகையில், “45 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகப்படியாக வேலையில்லாத திண்டாட்டப் பிரச்சினையை தற்போது எதிர்கொண்டிருக்கிறோம். ரூ.500,ரூ.1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதால் ஏழை மக்களின் வாழ்க்கையை அது கடுமையாக பாதித்துவிட்டது. அதன் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் மக்கள் இன்றும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இன்றைய தேதியிலும் 10-ல் இருந்து 15 பெருமுதலாளிகளின் நலனுக்காக மட்டுமே பாஜக அரசு செயலாற்றி வருகிறது” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x