Last Updated : 26 Aug, 2015 07:40 PM

 

Published : 26 Aug 2015 07:40 PM
Last Updated : 26 Aug 2015 07:40 PM

தீவிரவாதத்தை நாடும் காஷ்மீர் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: உயர் ராணுவ அதிகாரி

காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதத்தை தேர்ந்தெடுப்பது அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விவகாரம் என்று ஸ்ரீநகரைச் சேர்ந்த லெப்டினண்ட் ஜெனரல் சுப்ரதா சஹா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள், இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதால் உள்ளூர் இளைஞர்களை தேர்ந்தெடுப்பது அதிகரித்துள்ளது என்கிறார் சஹா.

தேர்ந்தெடுப்பதில் பல காரணிகள் செயல்படுகின்றன என்று கூறும் இவர், மத தீவிரவாதம், சொந்த அதிருப்தி, அல்லது கல்வியின்மை அதிருப்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி தேர்ந்தெடுப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்கிறார். இவர்களும் அங்கீகாரம் மற்றும் தகுதியைத் தேடி தீவிரவாதத்தை கையில் எடுக்கின்றனர், என்கிறார் அவர்.

"பயங்கரவாதிகளுடன் இணையும் இளைஞர்கள் விவகாரம் கவலையளிக்கிறது. 2012-13-ஐ ஒப்புநோக்கும் போது தீவிரவாதத்துக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2014-15-ல் அதிகரித்துள்ளது.

எல்லை வழியாக ஊடுருவல் இந்த ஆண்டு அதிகரித்திருந்தாலும் பெரும்பாலும் அது தீவிரவாதிகளின் தோல்வியிலேயே முடிந்தது. தீவிரவாதிகளின் முரட்டுத் துணிச்சலுக்கும், நமது உறுதிப்பாடுக்கும் நடக்கும் சண்டையாக இதனைப் பார்க்கிறேன். 11 முறை தீவிரவாதிகள் எல்லை ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஊடுருவல் அதிகரிக்கும் நிலையே இருந்து வருகிறது” என்றார்.

ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று கூறும்போது 4 லஸ்கர் தீவிரவாதிகள், அதாவது மொகமது நவேத் யாகூப் உட்பட எப்படி உதாம்பூருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முடிந்தது என்று கேட்ட போது, “இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது, நவேதின் வாக்குமூலங்களில் திரும்பத் திரும்ப ஒவ்வொரு முறையுஜ் வேறு வேறு கதைகள் கூறப்படுகின்றன.

அதேபோல் ஐ.எஸ். கொடி காஷ்மீரில் பறக்கவிடப்படுவதும், சமூக வலைத்தளங்கள் மூலம் உலகம் முழுதும் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு பெருகி வருவதும் மிகவும் கவலையளிக்கக் கூடியதே.

ஆனால் ஒரு நம்பிக்கையூட்டும் விஷயம் என்னவெனில், இளைஞர் யாராவது காணாமல் போனால் பெற்றோர் உடனே புகார் அளிக்கின்றனர், சிலர் காணாமல் போய் மீண்டும் கூட குடும்பத்துடன் சேர்ந்துள்ளனர்.

இளைஞர்களை தீவிரவாதம் பக்கம் செல்லாமல் செய்ய, கல்வி, அதிகாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம்” என்றார் ராணுவ அதிகாரி சுப்ரதா சஹா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x