Last Updated : 01 Dec, 2019 11:11 AM

 

Published : 01 Dec 2019 11:11 AM
Last Updated : 01 Dec 2019 11:11 AM

மகாராஷ்டிர சபாநாயகர் தேர்தலில் திடீர் திருப்பம்: காங்கிரஸ் எம்எல்ஏ நானா படோல் போட்டியின்றித் தேர்வு

மகாராஷ்டிர சபாநாயகர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த பாஜக எம்எல்ஏ கிஷான் கதோர் மனுவை வாபஸ் பெற்றதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ நானா படோல் சபாநாயகராகப் போட்டியின்றித் தேர்வாகிறார்.

பாஜக வேட்பாளர் கிஷான் கதோர் இன்று காலை 10 மணிக்குத் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதையடுத்து திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுள்ளார். எம்எல்ஏக்களுக்குப் பதவி ஏற்பு செய்து வைப்பதற்காக பாஜக மூத்த உறுப்பினர் காளிதாஸ் கோலம்பர் இடைக்கால சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.

காளிதாஸ் கோலம்பர்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் வெள்ளிக்கிழமை அமைச்சரவை கூடி, சபாநாயகரை மாற்றி, என்சிபி கட்சியைச் சேர்ந்த திலீப் பாட்டிலை நியமித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பை திலீப் பாட்டீல் சபாநாயகராக இருந்து நடத்தினார். ஆனால், கோலம்பரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கியதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூடிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகர் விதிமுறைப்படி தேர்வாகவில்லை, அரசியலமைப்பின்படி சட்டப்பேரவை கூட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டி பாஜக வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு 169 உறுப்பினர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

இதற்கிடையே இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜக சார்பில் எம்எல்ஏ கிஷான் கதோர், காங்கிரஸ் சார்பில் நானோ படோல் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனால் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் இன்று காலை 10 மணி அளவில் பாஜக வேட்பாளர் கிஷான் கதோர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து போட்டியின்றி காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ நானா படோல் சபாநாயகராகத் தேர்வாகிறார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், " பாஜக சார்பில் சபாநாயகர் பதவிக்கு கிஷான் கதோரை வேட்பாளராகக் களமிறக்கி இருந்தோம். ஆனால், நேற்று சில வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதால், கதோர் வாபஸ் பெற முடிவு எடுத்தோம்" எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் நானா படோல் விதர்பா பகுகியில் சகாலி தொகுதியில் இருந்து தேர்வானவர். கிஷான் கதோர் தானே மாவட்டம், முர்பாத் தொகுதியில்இருந்து 4-வது முறையாகத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x