Last Updated : 30 Nov, 2019 12:37 PM

 

Published : 30 Nov 2019 12:37 PM
Last Updated : 30 Nov 2019 12:37 PM

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : வெற்றிபெறுவோம்-சிவசேனா கூட்டணி

சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணியில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைந்துள்ள மகா விகாஸ் கூட்டணி இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.

இன்று பிற்பகல் 2 மணிக்குச் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலில் கூட்டணி அமைத்துச் சந்தித்த பாஜகவும், சிவசேனா கட்சியும் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக எழுந்த மோதலில் 35 ஆண்டுகள் நட்பை முறித்துக் கொண்டன. இதனால் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லாத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

சிவசேனா கட்சி, காங்கிரஸ், என்சிபி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றபோது, என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன் பாஜக தலைமையில் முதல்வராக பட்னாவிஸ் 2-வது முறையாக பதவிஏற்றார். பெரும்பான்மை இல்லாத அஜித் பவார் துணையுடன் பட்னாவிஸ்க்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கூட்டணி கட்சிகள் சார்பி்ல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் சபாநாகர் தேர்தலில் போட்டியிட உள்ள நானா படோல் : படம்

பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அஜித் பவாரும், அதைத் தொடர்ந்து பட்னாவிஸும் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதைத் தொடர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா தலைமையில் காங்கிரஸ், என்சிபி கூட்டணி உரிமை கோரின. மாநிலத்தின் 18-வது முதல்வராக உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

சிவசேனாவுக்கு 56 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் 44 எம்எல்ஏக்கள், என்சிபிக்கு 54 எம்எல்ஏக்கள் சிறிய கட்சிகள், சுயேட்சைகள் என 162 எம்எல்ஏக்கள் பலம் இருப்பதாக மகா விகாஸ் அகாதி கூட்டணி தெரிவித்துள்ளது. பெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

அனைத்து எம்எல்ஏக்களும் பதவி ஏற்றுவிட்ட நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சட்டப்பேரவைக் கூடுகிறது. எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ காளிதாஸ் கோலம்கர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக என்சிபி கட்சியைச்சேர்ந்த எம்எல்ஏ திலி்ப் வால்சே பாட்டீல் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் திலிப் வால்சே பாட்டீல் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று முடிந்ததும் நாளை சட்டப்பேரவையில் சபாநாயகருக்கான தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் வேட்பாளராக நானா படோல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பாஜக சார்பி்ல கிஷான் கதோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் :படம்

என்சிபி கட்சியைச் சேர்ந்தவரும் அமைச்சருமான சகன் புஜ்பல் கூறுகையில், " எங்களுக்கு 165 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

ஆனால், பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், " பாஜகவைச் சேர்ந்த காளிதாஸ் கோலம்பரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு திலிப் வல்சே பாட்டீலை நியமித்தது சட்டவிரோதம். பதவிப்பிரமாணமும் சட்டப்படி நடக்கவில்லை. புதிய அரசு அனைத்து விதிமுறைகளையும் மீறிவிட்டது. இதுதொடர்பாக ஆளுநரிடம் நாங்கள் மனு அளிப்போம், உச்ச நீதிமன்றத்தையும் நாடுவோம். நாளை நடக்கும் சபாநாயகர் தேர்தலில் பாஜக சார்பில் கிஷான் கதோர் நிறுத்தப்பட்டுள்ளார் " எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x