Published : 30 Nov 2019 12:23 PM
Last Updated : 30 Nov 2019 12:23 PM

''என் சொந்த நாட்டில் நான் ஏன் பாதுகாப்பாக உணரமுடியவில்லை?'' - நாடாளுமன்றத்திற்கு வெளியே இளம்பெண் தனிமைப் போராட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபாதையில் தனிமைப் போராட்டம் நடத்திய பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

கடந்த இரண்டு தினங்களில் ஹைதராபாத்தில் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளன. சில தினங்களுக்கு முன் ராஞ்சியில், 25 வயதான சட்ட மாணவி ஒரு ஆயுதமேந்திய குழுவினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் பெருகுவதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இளம்பெண் ஒருவர் தனிமைப் போராட்டத்தில் இறங்கினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் அனு துபே, இவர் இன்று காலை நாடாளுமன்ற சாலைக்கு வந்தார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்லாமல்
நடைபாதையிலேயே அமர்ந்துகொண்டார்.

மவுனமாக அமர்ந்தவாறு ''என் சொந்த பாரதத்தில் நான் ஏன் பாதுகாப்பாக உணரமுடியவில்லை?'' என்ற வாசகம் தாங்கிய அட்டையை ஏந்தியாவறு அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைப் பார்த்த போலீஸார் போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் மறுக்கவே அவரை போலீஸார் கைது செய்தனர். வேனில் ஏற்றிச்சென்றபோது அனு துபேவின் முகம் மிகவும் துயரத்துடன் காணப்பட்டது.

காவல் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் செய்தி அறிந்த டெல்லி மகளிர் ஆணையக்குழு காவல்நிலையத்தை வந்தடைந்தது. சிறிது நேரத்தில் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை எதிர்த்துப் போராடிய இளம்பெண் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இளம்பெண் அனு துபேவின் போராட்டத்தைப் பாராட்டி துணிச்சலான பெண் என்று சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்துவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x