Published : 27 Nov 2019 01:50 PM
Last Updated : 27 Nov 2019 01:50 PM

ஏழு மில்லியன் மக்களைப் பூட்டிவைக்க முடியாது: காஷ்மீரில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்

காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொள்ள வேண்டுமென செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஏழு மில்லியன் மக்களைப் பூட்டிவைக்க முடியாது என்று வாதிட்டார்.

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை வாபஸ் பெறக் கோரியும் மாநிலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளவும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

காஷ்மீர் மாநில அரசின் நிர்வாகத்திற்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் ஒரே மனுவாகப் பாவித்து இன்று விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காஷ்மீர் தொடர்பான விசாரணையை மேற்கொண்டது.

விசாரணையின்போது, காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் அனுராதா பாசினுக்கு ஆஜரான வழக்கறிஞர் பிருந்தா குரோவர், ''காஷ்மீர் மக்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் அரசியலமைப்பிற்கு விரோதமானது. மேலும் இந்தக் கட்டுப்பாடுகள் விகிதாசாரத்தின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

விதிகளைத் தளர்த்தக் கோரி தாக்கல் செய்திருந்த இன்னொரு மனுதாரர், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் தேசிய பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால் ஏழு மில்லியன் மக்களையும் 'பூட்டிவைக்க முடியாது'' என்று வாதிட்டார்.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.வி.ரமணா, நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த பின்னர் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.

பிரிவு 370-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் பாக்கிஸ்தானின் ராணுவமும் மக்களை 'ஜிஹாத்' தூண்டுவதற்கு சமூக ஊடகங்களில் முயற்சிகள் மேற்கொண்டன. அதனால்தான் ஒருங்கிணைந்த காஷ்மீர் மாநிலத்தில் இணைய சேவைகளில் தடைகள் விதிப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்தது.

''தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக ஓர் உயிரையும் இழக்கவில்லை அல்லது ஒரு புல்லட் கூட சுடப்படவில்லை'' என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 21-ம் தேதி அன்று காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நியாயப்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x