Published : 27 Nov 2019 10:15 AM
Last Updated : 27 Nov 2019 10:15 AM

உயர் தொழில்நுட்ப பூமிக் கண்காணிப்பு ‘கார்ட்டோசாட்-3’ விண்ணில் பாய்ந்தது

'கார்ட்டோசாட் - 3' என்ற செயற்கைக்கோளை, 'பி.எஸ்.எல்.வி. - சி46' ராக்கெட் உதவியுடன், 'இஸ்ரோ' புதன்கிழமை (நவ.27) காலை விண்ணில் செலுத்தியது.

நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு போன்றவற்றின் ஆய்வுக்காக பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது இஸ்ரோ. தற்போது ராணுவ ஆய்வுகளுக்கு உதவுவதற்காக 'கார்ட்டோசாட் - 3' செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அதனுடன் அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து இன்று காலை 9:28 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து 509 கி.மீ., தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைக்கோளாகும். இது துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டதாகும்.

இதுவரை ஐ.எஸ்.ஆர்.ஓ. மே 2005 முதல் 8 கார்ட்டோசாட் விண்கலங்களை செலுத்தியுள்ளது. கார்ட்டோசாட் -2 வகை மாதிரியான இவை ராணுவப் பயன்பாடுகளுக்காகச் செலுத்தப்பட்டது.

கார்ட்டோசாட் செயற்கைக்கோள்களின் சிறப்பம்சம் என்னவெனில் இயற்கை புவியியல் அமைப்புகளையும் மனிதனால் உருவாக்கப்பட்ட அம்சங்கள் இரண்டையுமே துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுவதாகும்.

கார்டோசாட் -3 செயற்கைக் கோள் நகர மேம்பாட்டுத் திட்டம், வேளாண்மை, நீராதார மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளுக்கான தரவுகளை அனுப்பும் வல்லமை கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x