Last Updated : 26 Nov, 2019 02:07 PM

 

Published : 26 Nov 2019 02:07 PM
Last Updated : 26 Nov 2019 02:07 PM

26 மணிநேர கவுண்ட் டவுன் தொடங்கியது: கார்ட்டோசாட்-3 உள்பட 14 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் நாளை விண் ணில் பாய்கிறது

இஸ்ரோவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள், அமெரிக்காவின் 13 நானோ செயள்கைக்கோள் ஆகியவற்றைச் சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. இதற்கான 26 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை தொடங்கியது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் நாளை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட்டில் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள், அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்கள் ஆகியவை செலுத்தப்பட உள்ளன. இதற்கான 26 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை 7.28 மணிக்குத் தொடங்கியது. பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் இது 9-வது மற்றும் திறன் கூட்டப்பட்ட எக்ஸ்எல் வகையில் 21-வது ராக்கெட்டாகும். இதில் 6 வகையான மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் மூன்றாம் தலைமுறையினருக்கான அதிநவீன செயற்கைக்கோளாகும். இதில் உள்ள கேமராக்கள் மிக அதிக தெளிவுடன் பூமியைப் படம்பிடிக்கும் இயல்புடையவை.

கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 5 ஆண்டுகளாகும். நாளை விண்ணில் செலுத்தப்படும் கார்ட்டோசாட் செயற்கைக்கோள் புவியில் இருந்து 509 கி.மீ. தொலைவிலும் 93 டிகிரி கோணத்திலும் நிலைநிறுத்தப்பட உள்ளது

1,625 கிலோ எடையில் இந்த கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் நகர மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற வளங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, கடற்கரை நிலம் மற்றும் நிலம் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. அதற்குத் தீர்வு காணும் வகையில் இந்த செயற்கைக்கோள் அமையும். மேலும் பேரிடர் காலங்களில் கார்ட்டோசாட் துல்லியமான புகைப்படங்களை எடுத்து அனுப்ப உதவும்.

வர்த்தக நோக்கில் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் சுமந்து செல்கிறது. இந்த 12 செயற்கைக்கோள்கள் புவியின் தன்மை குறித்து அறியவும், ஒரு செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x