Last Updated : 21 Nov, 2019 03:13 PM

 

Published : 21 Nov 2019 03:13 PM
Last Updated : 21 Nov 2019 03:13 PM

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: ஜிதேந்திர சிங் தகவல்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி வரை ஏறக்குறைய 7 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்று மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக இன்று விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், " மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி ஏறக்குறைய 7 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

மொத்தம் 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இதில் குரூப் சி பிரிவில் மட்டும் 5 லட்சத்துக்கு 74 ஆயிரத்து 289 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. குரூப் பி பிரிவில் 89 ஆயிரத்து 638 பணியிடங்களும், குரூப் ஏ பிரிவில் 19 ஆயிரத்து 896 பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் குறித்த அறிக்கையின் அடிப்படையில் பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்எஸ்சி) மூலம் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 338 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரியத்தின் மூலம், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 573 பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்துள்ளன.

மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிக்கையின்படி, குரூப் சி பிரிவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 138 பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தபால் துறையில் உள்ள 19 ஆயிரத்து 522 காலியிடங்களுக்கு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.

ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி ஆகியவை மூலம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 591 காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தும் தேர்வுகள் மூலம் உரிய நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. நிர்வாக அதிகாரம் இல்லாத பதவிகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து நேர்முகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடக்கின்றன''.

இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்

பல்வேறு மத்திய அமைச்சகங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் எத்தனை பேர் நிரப்பப்படாமல் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளிக்கும்போது, "10 அமைச்சகங்களில் கீழ் உள்ள துறைகளில் எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓபிசி பிரிவினரை நிரப்பும் பணிகளை பணியாளர் அமைச்சகம் கண்காணித்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x