Published : 20 Nov 2019 04:41 PM
Last Updated : 20 Nov 2019 04:41 PM

ஆந்திராவில் சைபர் குற்றப் புகார்களைப் பதிவு செய்யும் ரோபோ: பொதுமக்கள் வரவேற்பு

ஆந்திர மாநிலக் காவல் நிலையம் ஒன்றில் சைபர் குற்றங்களைப் புதிய முறையில் பதிவு செய்வதற்கு என்றே ரோபோ ஒன்றை நிறுவியுள்ளதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன. மற்ற வகை குற்றங்கள் சார்ந்த புகார்களைத் தவிர்த்து சைபர் குற்றங்கள் சார்ந்த புகார்களுக்கு என்றே காவல்துறையில் தனிப்பிரிவுகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள மகாராணிபேட்டா காவல் நிலையத்தில் ஒரு புதிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு சைபர் குற்றப் புகார்களைப் பதிவு செய்வதற்காக ரோபோ போலீஸ் ஒன்று புதியதாக நிறுவப்பட்டுள்ளது.

இந்த ரோபோ உடனுக்குடன் புகார்களைப் பதிவு செய்துகொள்வதோடு உடனுக்குடன் தீர்வு காணும்பொருட்டு தொடர்புடைய அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துவிடுகிறது.

யார் வேண்டுமானாலும் ரோபோவை அணுகி, சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். அவற்றிற்கு உடனுக்குடன் தீர்வுக் காணப்படும் என்று விசாகப்பட்டினம் போலீஸார் தெரிவித்தனர்.

புகார்களைப் பதிவுசெய்துகொண்டு அப்புறப்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ முகவரை 'CYBIRA' (a cyber security interactive robotic agent) ஒரு தொடக்க முயற்சியாக ரோபோ கப்ளர் பிரைவேட் லிமிடெட் உருவாக்கியுள்ளது.

காவல் நிலையத்தின் வாசலில் ரோபோ நிறுத்திவைக்கப்பட்டதைக் கண்ட பலரும் இதன் அருகே வந்து கவனித்தனர். ரோபோ சிபிராவின் நடவடிக்கைகளைக் கண்டு வியந்தனர். ''நாம் வணக்கம் வைத்தால் சிபிராவும் வணக்கம் வைக்கும். இந்த ரோபோ ஒரே இடத்தில் நிற்காமல் தேவைக்கேற்ற இடங்களுக்கு நகர்ந்து செல்லும். அதன் மார்பிலுள்ள மானிட்டரில் நமது புகார்களைப் பதிவு செய்யலாம்'' என அதன் வழிகாட்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x