Published : 12 Nov 2019 10:26 AM
Last Updated : 12 Nov 2019 10:26 AM

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான புதிய அறக்கட்டளை நிறுவும் பணிகள் தொடக்கம்

புதுடெல்லி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று கூறும்போது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக அறக்கட்டளையை நிறுவும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம், அட்டர்னி ஜெனரலுடன் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து அதற்கேற்ப அறக்கட்டளை நிறுவப்படும்" என்று தெரிவித்தன.

அயோத்தி நிலம் கையகப்படுத்தும் சட்டம் கடந்த 1993-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி சர்ச்சைக்குரிய நிலத்தை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது. ராம ஜென்ம பூமியான 2.77 ஏக்கர் நிலம் மற்றும் மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலம் அறக்கட்டளை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு முன்பாக வரும் ஜனவரிலேயே கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

விஎச்பி அமைப்பு தயாரித்துள்ள வடிவமைப்பை பின்பற்றி கோயில் கட்ட 5 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அந்த அமைப்பின் சார்பில் கோயிலின் மாதிரி வடிவம், அயோத்தி கரசேவகபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பொறுமையின் சிகரம் பராசரன்..

அயோத்தி வழக்கில் ராம் லல்லா சார்பில், 92 வயதான தமிழக மூத்த வழக்கறிஞர் பராசரன், ஒரு ரூபாய் கூட ஊதியம் வாங்காமல் வாதாடினார். முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவாண் விசாரணையின்போது மிகவும் ஆக்ரோஷமாக வாதாடினார். இந்து தரப்பின் ஆவணங்கள் முட்டாள்தனமானவை என்று கூறி அவற்றை கிழித்து எறிந்தார்.

அப்போது பராசரன், பொறுமையின் சிகரமாக அமர்ந்திருந்தார். அதன்பிறகு நடந்த விசாரணையின்போதும் தவாண் மீது அவர் கோபம் கொள்ளவில்லை. இருதரப்பு விசாரணை கடந்த மாதம் 16-ம் தேதி நிறைவு பெற்றது. அப்போது நீதிமன்ற வளாகத்தில் ராஜீவ் தவாணுக்காக சுமார் 15 நிமிடங்கள் வரை பராசரன் காத்திருந்தார். அவர் வந்த பிறகு, அவருடன் இணைந்து புன்னகையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x