Published : 11 Nov 2019 03:30 PM
Last Updated : 11 Nov 2019 03:30 PM

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது யார்? இரவு 7.30 மணி வரை கெடு: உத்தவ் தாக்கரே-சரத் பவார் சந்திப்பு; காங்கிரஸ் முடிவு என்ன?

மும்பை

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இரவு 7.30 மணிக்குள் சிவசேனா தெரிவிக்க வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்துள்ள நிலையில், என்சிபி தலைவர் சரத் பவாரைச் சந்தித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார்.

மகாராஷ்டிராவில் நடந்த முடிந்த தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், தனித்தனியாக பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 288 இடங்களில் 145 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை.

ஆனால், முதல்வர் பதவிக்கு சிவசேனாவும், பாஜகவும் போட்டியிட்டதால் இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்துப் பேசவில்லை.
சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.

ஆனால், பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த பாஜக, ஆளுநர் அழைப்பை நிராகரித்தது. இதையடுத்து 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி நேற்று இரவு அழைத்தார். இன்று இரவுக்குள் முடிவை அறிவிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, 56 எம்எல்ஏக்கள் வைத்துள்ள சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைக் கோரும் முயற்சியில் சிவசேனா இறங்கியுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகினால்தான் பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம் என்று தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. இதனால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்துள்ளார்.

சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு மேல் நடக்கும் முக்கியக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின்போது உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, என்சிபி தலைவர்கள் அஜித் பவார், சுனில் தட்கரே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச செயல் திட்டம், மாநிலத்தில் நிலவும் விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியுள்ளார்கள். சிவசேனா அமைக்க உள்ள ஆட்சிக்கு என்சிபி ஆதரவு அளிக்க வேண்டும் என்று சரத் பவாரிடம் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவசேனா தலைமையில் அமையும் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இன்று மாலை 4 மணிக்கு மேல் காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவை பொறுத்துத்தான் தங்கள் முடிவு அமையும் என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று இரவு 7.30 மணிக்குள் சிவசேனா ஆட்சி அமைப்பது தொடர்பாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத் சிங் கோஷியாரியும் கெடு விதித்துள்ளார். இதனால், மகாராஷ்டிரா அரசியல் உச்சகட்ட பரபரப்பை நோக்கி நகர்ந்துள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு மேல் காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் முடிவைப் பொறுத்துதான் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழக்கூடும்.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் சிவசேனா தலைமையில் அமையும் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என ஒருதரப்பினரும், அரசியல் எதிர்காலத்தைச் சீரழித்துவிடும் என ஒரு தரப்பினரும் பேசி வருவதால், காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x