Published : 11 Nov 2019 10:12 AM
Last Updated : 11 Nov 2019 10:12 AM

பாஜக-சிவசேனா கூட்டணி முறிவு: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் அரவிந்த் சாவந்த்

மும்பை

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வேண்டுமென்றால், மத்திய அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் விதித்த நிபந்தனையை ஏற்று, சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றிக்குப் பின் சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் மத்திய கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சராக இருந்தார். அந்தப் பதவியை இன்று ராஜினாமா செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆனால், ஆட்சியை சரிசமமாகப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட மனக்கசப்பால் இரு கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.

தேர்தல் முடிந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும், பாஜக- சிவசேனா இடையே ஆட்சி அமைப்பது குறித்த பேச்சு தொடங்கவில்லை. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா முரண்டு பிடிக்க, முதல்வர் பதவி பற்றிய பேச்சுக்கே வாய்ப்பில்லை என்று பாஜக திட்டவட்டமாக அறிவித்தது.

சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த, 105 எம்எல்ஏக்கள் இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இல்லாததையடுத்து, ஆளுநர் அழைப்பை ஏற்க மறுத்த பாஜக ஆட்சி அமைக்கத் தயாரில்லை எனத் தெரிவித்தது.

இதையடுத்து, மாநிலத்தில் 2-வது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து, நேற்று இரவு சிவசேனாவின் இளம் தலைவரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசினர்.

56 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருக்கும் சிவசேனாவால் ஆட்சி அமைப்பது கடினம் என்றபோதிலும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகினால்தான் பேச்சைத் தொடங்க முடியும் என்று தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது.

மேலும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோரவும் சிவசேனா சார்பில் அதன் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று அவசரமாக டெல்லி புறப்படுகிறார்.

இந்த சூழலில் சிவசேனா எம்.பி.யும், மத்திய அமைச்சருமான அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

மும்பையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தொகுதி ஒதுக்கீடும், அதிகாரப் பகிர்வும் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடாக இருந்தது. இருதரப்பும் ஒப்புக்கொண்டார்கள். இப்போது, அந்த ஒப்பந்தத்தை மறுப்பது சிவசேனாவுக்கான மிரட்டலாகும். மகாராஷ்டிராவில் பொய்களைப் பின்தொடர்வதற்காக பாஜக நீண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உண்மையின் பக்கம் சிவசேனா எப்போதும் நிற்கும். இப்படிப்பட்ட சூழலில் நான் எதற்காக மத்திய அமைச்சரவையில் நீடிக்க வேண்டும். நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை அனுப்பி இருக்கிறேன். இது தொடர்பாக விரிவாக இன்று காலை 11 மணிக்குப் பேசுகிறேன்" எனத் தெரிவித்தார்.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x