Last Updated : 10 Aug, 2015 10:35 AM

 

Published : 10 Aug 2015 10:35 AM
Last Updated : 10 Aug 2015 10:35 AM

ஜார்க்கண்டில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலில் இன்று அதிகாலையில் நடந்த பூஜையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயில் திருவிழாவிற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் உத்தரப் பிரதேச மாநிலத்தையும், நேபாள நாட்டையும் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "தியோகர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. சிவனுக்கு புனித நீர் படைப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

இரண்டு நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது வரிசையில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது" எனத் தெரிவித்தனர்.

பிரதமர் இரங்கல்:

ஜார்க்கண்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜார்க்கண்டில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கள நிலவரம், மீட்புப் பணிகள் குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸிடம் கேட்டறிந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வர் உத்தரவு:

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுவர் தாஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

உள்துறை செயலர் என்.என்.பாண்டே, போலீஸ் கூடுதல் டிஜிபி எஸ்.என்.பிரதான் ஆகியோர் மீட்புப் பணிகளை நேரடியாக பார்வையிட்டு வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ல்டசம் இழப்பீடு:

ஜார்க்கண்ட் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ரகுவர் தாஸ் தெரிவித்துள்ளார். காமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x