Published : 06 Nov 2019 11:33 AM
Last Updated : 06 Nov 2019 11:33 AM

சிவசேனாவில் முதல்வர்; இதுதான் மக்கள் விருப்பம்: ராவத் திட்டவட்டம் - சரத்பவார் இன்று முக்கிய முடிவு

மும்பை

சிவேசனாவில் இருந்து ஒருவர் முதல்வராக வருவதைத்தான் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். தேர்தலுக்கு முன் முதல்வர் பதவி குறித்து பாஜக, சிவசேனா இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் தேர்தல் முடிந்து 24-ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆனால், இரு கட்சிகளுக்கு இடையே கருத்தொற்றுமை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா கோரி வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. அவ்வாறு அதிகாரத்தில் சமபங்கு அளிக்க இயலாது என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

வரும் 8-ம் தேதிக்குள் சட்டப்பேரவையின் காலம் முடிவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை நேற்று இரவு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில் சிவேசனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மும்பையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''தேர்தலுக்கு முன் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவி தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்பட்டது உண்மைதான். அதன்படிதான் பாஜக இப்போது நடக்க வேண்டும்.

மாநிலத்தில் உள்ள விவசாயிகள், வேலைக்குச் செல்லும் மக்கள் அனைவரும் சிவசேனா தரப்பில் ஒருவர் முதல்வராக வருவதைத்தான் விரும்புகிறார்கள். உத்தவ் தாக்கரே தலைமை மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தவிதமான பேச்சும் கோரிக்கையும் பாஜகவிடம் இருந்து வரவில்லை. தேர்தலுக்கு முன் நாங்கள் என்ன ஒப்பந்தம் செய்துகொண்டோமோ, முடிவெடுத்தோமோ அதன்படிதான் நடக்க வேண்டும்.

புதிய திட்டம் குறித்து ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள். முன் என்ன பேசினோமோ அதன்படி நாம் ஆலோசிப்போம். எந்தவிதமான புதிய திட்டத்தையும் கோரிக்கையையும் நாங்களும் அனுப்பவில்லை, பாஜக தரப்பிலும் அனுப்பவில்லை.

மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவ்வாறு அமல்படுத்தினாலும் அதற்கு சிவசேனா பொறுப்பேற்காது. மக்கள் அளித்த தீர்ப்பை அது அவமானப்படுத்தியதற்கு ஒப்பாகும்.

உத்தவ் தாக்கரேவும், அவரின் மகன் ஆதித்யா தாக்கரேவும் மாநிலம் முழுவதும் பயணம் செய்து பருவம் தவறிய மழையால் அழிந்துபோன பயிர்கள் குறித்தும், விவசாயிகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்கள். மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களிடம் குறைகளைக் கேட்டுள்ளார்கள். ஆதலால், வேலைக்குச் செல்லும் பிரிவினர் சிவசேனா மீது எதிர்பார்ப்பு வைத்துள்ளார்கள்.

அனைவரின் எதிர்பார்ப்பும் சிவேசேனா தரப்பில் முதல்வராக ஒருவர் வருவது மட்டுமே. மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காவிட்டால் மாற்று ஆட்சி அமைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசிப்பது குறித்து இப்போது ஏதும் கூற இயலாது. அது குறித்துக் கட்சியின் தலைமையுடன் பேசித்தான் முடிவு எடுப்போம்".

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

இதற்கிடையே சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதாக இருந்தால், பாஜகவுடன் உறவை அந்தக் கட்சி துண்டித்தால் மட்டுமே முடியும். குறிப்பாக, சிவசேனா தரப்பில் மத்திய அமைச்சராக இருக்கும் அரவிந்த் சாவத் தனது பதவியை ராஜினாமா செய்து, கூட்டணியில் இருந்து விலகினால்தான் சாத்தியம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்குமா அல்லது சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து அமைத்து, வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதுதொடர்பாக இன்று நண்பகலுக்குப் பின் சரத்பவார் சில முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், மாநிலத்தில் உள்ள அரசியல் சூழலில் தெளிவான சூழல் ஏற்படும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x