Last Updated : 13 Aug, 2015 08:22 PM

 

Published : 13 Aug 2015 08:22 PM
Last Updated : 13 Aug 2015 08:22 PM

ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற மழைக்கால கூட்டத்தொடரை மீண்டும் கூட்ட வாய்ப்பு

மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், தொடர் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்காக, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட அவைகளை மீண்டும் கூட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 3 வாரங்களும் வீணாகப் போனது.

எனவே, மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பிருக்குமானால், மீண்டும் கூட்டத்தைக் கூட்டலாம் என முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

வியாழக்கிழமை தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தொடர் முடிந்ததற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, குறுகிய கால அவகாசத்தில் மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 85 (2)ன்படி குடியரசுத் தலைவர் இரு அவைகளிலும் கூட்டத்தொடர் முடிந்ததற்கான அறிவிப்பை வெளியிடுவார். ஆனால், இரு அவைகளும் முடிந்ததற்கான அறிவிப்பை வெளியிடாவிட்டோலோ, பேரவைத் தலைவரால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டாலோ, அதே கூட்டத்தொடர் எந்த நேரத்திலும் மீண்டும் கூட்டப்படலாம்.

இது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “தொடர் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

நான் இப்போது எங்களது உத்தி என்ன என்பதை கூறப்போவதில்லை. ஏப்ரல் 1, 2016-ல் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்படுவதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை இப்போதைக்கு நான் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x