Published : 04 Nov 2019 03:23 PM
Last Updated : 04 Nov 2019 03:23 PM

நீதிமன்ற வளாக மோதல் விவகாரம்: வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றம் வெளியே ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி

வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றம் வெளியே வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் சங்கங்கள் இன்று நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டன.

திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் நேற்று கடுமையான மோதல் வெடித்தது. மிகப்பெரிய கலவரமாக மூண்ட இச்சம்பவத்தில் இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். காயம் பட்ட வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்க் நடத்தும் விசாரணை ஆறு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த வழக்கின்போது, விசாரணை நீதிபதி கார்க்குக்குத் தேவைப்படும் எந்த ஒரு உதவியும் சிபிஐ, புலனாய்வுப் பணியகம் மற்றும் விஜிலென்ஸ் துறைகளைச் சார்ந்த இயக்குநர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட எந்தவொரு உயர் பதவியில் உள்ள அதிகாரிகளும் வழங்க முன்வரவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், டெல்லி பார் கவுன்சில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவு ஐ.சி.யு.வில் உள்ள இரண்டு வழக்கறிஞர்களுக்கு தலா ரூ .2 லட்சமும், மோதலில் காயமடைந்த வழக்கறிஞர்களுக்கு ரூ .50 ஆயிரமும் வழங்க முடிவு செய்துள்ளது.

நீதிமன்றத்திற்கு வெளியே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''காயமடைந்த வழக்கறிஞர்களுக்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.

இந்தச் சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் குறைவானது அல்ல. காவல்துறையினர் வக்கீல்களை நோக்கி வெற்று இடத்தில் துப்பாக்கிக் குண்டுகளை வீசினர். இந்த விஷயத்தில் உண்மையைக் காட்ட ஊடகங்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஒரு வழக்கறிஞர் ஒரு மருத்துவமனையில் தனது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x