Published : 27 Jul 2015 04:47 PM
Last Updated : 27 Jul 2015 04:47 PM

உச்ச நீதிமன்ற கேள்வியால் யாகூப் மேமன் தூக்கு தண்டனை வழக்கில் திருப்பம்

மரண தண்டனையை எதிர்த்து யாகூப் மேமன் செய்த மனு மீதான விசாரணை குறித்து எதிர்பாராத திருப்பமாக, அவரது சீராய்வு மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தெரிவு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதேவேளையில், யாகூப் மேமன் மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் அடுத்தடுத்து 12 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 257 பேர் இறந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவ்வழக்கில் யாகூப் மேமனு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன் றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும், பின்னர் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து கடைசி சட்ட நிவாரணமாக கருதப்படும் கியூரேட்டிவ் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து யாகூப் மேமனை நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30-ம் தேதி தூக்கில் இடுவதற்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் யாகூப் மேமன் கருணை மனு தாக்கல் செய்தார். மேலும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். "எனக்கு சட்டரீதியான பரிகாரங்கள் இன்னும் நிறைவடையவில்லை. மகாராஷ்டிர அரசு அளவுக்கு மீறி அவசரம் காட்டுகிறது" என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், மற்றும் நீதிபதி அனில் ஆர்.தவே முன்னிலையில் விசாரணைக்கு வந்த யாகூப் மேமன் ரிட் மனு பற்றிய வழக்கில் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் சேர்க்கையில் நடைமுறைக் குறைபாடு நிகழ்ந்துள்ளதாக நீதிபதி குரியன் ஜோசப் சந்தேகம் எழுப்பினார்.

யாகூப் மேமனின் மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அனைவருக்கும் ஏன் அவரது சீராய்வு மனு அனுப்பி வைக்கப்படவில்லை என்று குரியன் ஜோசப் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

உச்ச நீதிமன்ற விதிமுறைகள் தொகுப்பின் 48-ம் எண் உத்தரவின் 14-ம் விதியின்படி அனைத்து நீதிபதிகளுக்கும் சீராய்வு மனு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். இதன்படி தன்னையும், நீதிபதி செலமேஸ்வரையும் உச்ச நீதிமன்ற அமர்வில் சேர்க்கவில்லை என்றும் குரியன் ஜோசப் கேள்வி எழுப்பினார்.

சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த அமர்வில் தற்போது இங்குள்ள தவே மட்டுமே இருந்துள்ளார். ஜூலை 22-ம் தேதி யாகூப் மேமனின் மறுசீராய்வு மனுவை எச்.எல்.தத்து, தாக்கூர் மற்றும் அனில் ஆர்.தவே ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்தது.

சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் நியமனத்தில் நடைமுறை தவறு நிகழ்ந்துள்ளதாக கூறிய நீதிபதி குரியன் ஜோசப், தனது கேள்வி "கனமான கேள்வி" என்று கூறி மத்திய அரசு இந்த விவகாரத்தை முதலில் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை நாளை (செவ்வாய்க் கிழமை) 10.30 மணிக்கு மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேமன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், நீதிபதி குரியன் ஜோசப்பின் வாதத்தை ஒப்புக் கொண்டு கூறும்போது, தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து தடா நீதிமன்றம் வழங்கிய உத்தரவு சட்டத்துக்கு இணங்க இல்லை. ஏப்ரல் 30-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றம் பற்றி உத்தரவிடப்பட்டுள்ளது, ஆனால், மேமனிடம் இந்த விவரம் ஜூலை 13-ம் தேதிதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சட்ட ரீதியாக மேமன் தன்னை தயார்படுத்திக் கொள்ள 17 நாட்கள் அவகாசமே இருந்துள்ளது என்று வாதிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x