Published : 30 Oct 2019 06:10 PM
Last Updated : 30 Oct 2019 06:10 PM

ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் நாளை உதயம்: முழுவீச்சில் பதவியேற்புப் பணிகள் 

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு பிராந்தியங்களுக்கும் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன்பாக தனித்தனியாக யூனியன் பிரதேச அந்தஸ்து பெறும் நிலையில் துணைநிலை ஆளுநர்கள் பதவியேற்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அதனுடன் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் நாளை உதயமாகின்றன. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. நாளை லடாக் மற்றும் ஸ்ரீநகரில் நடைபெற உள்ள இரண்டு யூனியன் பிரதேசத்திற்கான துணை நிலை ஆளுநர்களின் பதவியேற்புப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷ் சந்திர முர்மு நாளை பிற்பகல் ஜம்மு-காஷ்மீரின் முதல் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்க உள்ளார். இவர் 1985ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி. ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு மத்திய அரசின் செலவுச் செயலாளராக முர்மு பணியாற்றி வந்தார்.

அதே நாளில், லடாக்கின் முதல் துணை நிலை ஆளுநராக ராதா கிருஷ்ணன் மாத்தூர் பதவியேற்க உள்ளார். இவர் 1977 ஆம் ஆண்டில் திரிபுரா கேடர் பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். ராதாகிருஷ்ணன் மாத்தூர் நவம்பர் 2018-ல் இந்தியாவின் தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வுபெற்றார்.

ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கீதா மிட்டல் துணைநிலை ஆளுநர்கள் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவர் முதலில் லடாக் துணைநிலை ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். அதன் பின்னர் முர்முவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஸ்ரீநகருக்குப் புறப்படுவார்.

காஷ்மீரின் ஆளுநர் சத்ய பால் மாலிக் கோவா ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x