Published : 24 Oct 2019 12:01 PM
Last Updated : 24 Oct 2019 12:01 PM

நாடுமுழுவதும் 51 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்:  ஆளும் கட்சிகள் முன்னிலை


புதுடெல்லி

நாடுமுழுவதும் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் ஆளும் கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

பல்வேறு மாநிலங்களில் 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.பிஹாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி, மகாராஷ்டி ராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்களுடன் துணை ராணுவத் தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னணி நிலவரம்

* உத்தரபிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. சமாஜ்வாதி 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் தலா ஒரு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

* குஜராத்தில் 6 இடங்களில் 3ல் பாஜகவும், 3ல் காங்கிரஸூம் முன்னிலை பெற்றுள்ளன.

* கேரளாவில் 5 தொகுதிகளில் 3 காங்கிரஸூம், 2 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன.

* பிஹாரில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் 2 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஓரிடத்திலும் 2 தொகுதிகளில் மற்ற கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன.

* அசாமில் 4 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும், ஓரிடத்தில் ஐக்கிய ஜனநாயக கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

* சிக்கிமில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக மற்றும் சிக்கிம் கிரந்தி மோர்ச்சா தலா ஓரிடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

* பஞ்சாபில் 4 தொகுதிகளில் 3ல் காங்கிரஸூம், ஓரிடத்தில் அகாலிதளமும் முன்னிலை வகிக்கின்றன.

*ராஜஸ்தானில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் ஓரிடத்திலும் ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி ஓரிடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

* இமாச்சல பிரதேசம் 2 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஓரிடத்தில் பாஜக வென்றுள்ளது. மேலும் ஓரிடத்தில் அந்த கடசி முன்னிலை பெற்றுள்ளது.

* தமிழகத்தில் 2 தொகுதிகளிலும் ஆளும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

* ஒடிசா ஒரு தொகுதியில் ஆளும் பிஜூ ஜனதாதளம் முன்னிலை வகிக்கிறது.

* தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமதி முன்னிலை வகிக்கிறது.

* மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் தலா ஒரு தொகுதிக்கு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

* மேகாலயா ஐக்கிய ஜனநாயக கட்சி முன்னிலை வகிக்கிறது.

* புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

*அருணாச்சல பிரதேசம் சுயேச்சை வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x