Published : 20 Oct 2019 10:32 AM
Last Updated : 20 Oct 2019 10:32 AM

பிரதமர் மோடியின் துருக்கி பயணம் ரத்து: காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி


பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி அதிபர் எர்டோகன் வெளிப்படையாக இருப்பதால், துருக்கி செல்லும் தனது பயணத்தைப் பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா.சபையில் காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகனின் தெரிவித்த கருத்து, பாரீஸில் நடந்த தீவிரவாத நிதித்தடுப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி செயல்பட்டது போன்ற காரணங்களால், பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் துருக்கி செல்வதாக இருந்த தனது துருக்கி பயணத்தை ரத்து செய்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

இந்த மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் சவுதி அரேபியாவில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து துருக்கி சென்று அந்த நாட்டு அதிபர் எர்டோகனைச் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்பின்போது, துருக்கி நாட்டுடன் வர்த்தகம், பாதுகாப்புத் துறைகளில் கூட்டுறவு போன்றவை குறித்து பிரதமர் மோடி விவாதிக்க இருந்தார்.

ஆனால் காஷ்மீர் விஷயத்தில் தேவையில்லாத கருத்துக்களை அதிபர் எர்டோகன் ஐநா சபையில் தெரிவித்ததும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதும் இந்தியா, துருக்கி இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், " பிரதமர் மோடி துருக்கி செல்லும் பயணம் திட்டமிடப்பட்டு இருந்ததே தவிர உறுதி செய்யப்படவில்லை. ஆதலால், உறுதி செய்யப்படாத பயணத்தை ரத்து செய்தார் என்ற பேச்சுக்கு இடமில்லை" எனத் தெரிவித்தனர்.

இதற்கு முன் கடந்த 2015-ம் ஆண்டு அன்டாலயா நகரில் ஜி20 நாடுகள் உச்ச மாநாடு நடந்தபோது பிரதமர் மோடி துருக்கி சென்றார். அதன்பின் துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒசாகா நகரில் நடந்த ஜி20 மாநாட்டில் துருக்கி அதிபர் எர்டோகனைச் சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.
அதன்பின் இருதலைவர்களும் சந்திக்காத நிலையில் பிரதமர் மோடி இம்மாதம் துருக்கி செல்ல திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தமாதம் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசினார். காஷ்மீரில் 80 லட்சம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள், இந்திய ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது, மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும், சர்வதேச சமூகம் அக்கறை கொண்டு விவகாரத்தைக் கவனிக்க வேண்டும் என்று எர்டோகன் பேசி இருந்தார்.

துருக்கி அதிபர் எர்டோகனின் பேச்சுக்கு இந்திய அரசு தரப்பில் பதிலடி தரப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் அளித்த பேட்டியில், " காஷ்மீர் குறித்து நன்கு புரிதலோடு துருக்கி அதிபர் பேச வேண்டும். காஷ்மீர் குறித்துப் பேசும்முன், அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்காகத் துருக்கியில் போர்க்கப்பல் கட்டிக்கொடுக்கவும் துருக்கி அதிபர் எர்டோகன் சம்மதித்தார். மேலும், சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து எழுப்புவோம் என்று பாகிஸ்தானுக்கும் உறுதி அளித்தார்.இதைத் தொடர்ந்து துருக்கியில் கட்டப்பட இருந்த இரு போர்க்கப்பல்களுக்கான ஆர்டரையும் இந்திய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், பாரீஸ் நகரில் சமீபத்தில் தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பான எப்ஏடிஎப் கூட்டம் நடந்தது. இதில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக போதுமான அளவு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தியா மீது அத்துமீறித் தாக்குதல் நடத்துவது, தீவிரவாதிகளை ஊடுருவச் செயல் போன்றவற்றைச் செய்கிறது என்று குற்றம்சாட்டியபோது, துருக்கி, சீனா, மலேசியா நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.

இதனால், பாகிஸ்தான் கறுப்புப்பட்டியல் நாடுகளில் சேர்க்கப்படாமல் தொடர்ந்து க்ரே பட்டியல் நாடுகளில் வைக்கப்பட்டது.பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாலும், காஷ்மீர் குறித்துப் பேசியதாலும் துருக்கி பயணத்தைப் பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x