Published : 19 Oct 2019 03:06 PM
Last Updated : 19 Oct 2019 03:06 PM

காமெடி சர்க்கஸ் செய்யாதீர்கள்; பொருளாதாரத்தை முன்னேற்றுவதுதான் உங்கள் வேலை: மத்திய அரசைச் சாடிய பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

நலிந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதுதான் உங்கள் வேலை. அதை விடுத்து காமெடி சர்க்கஸ் செய்யாதீர்கள் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட இந்தியர் அபிஜித் பானர்ஜி, " இந்தியாவின் பொருளாதாரம் மோசமான சூழலில் இருப்பதாகவும், உடனடியாக சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும் பானர்ஜி விமர்சித்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று புனே நகரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். ஆனால் பானர்ஜி ஒருசார்புடைய சிந்தனையாளர் போன்று பேசுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டமான குறைந்தபட்ச வருவாய் கிடைக்கும் திட்டத்தை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். அந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அதைப் பற்றிச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பதிலடி தரும் வகையில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரி்ல் கருத்து தெரிவித்துள்ளார்.

"பாஜகவினர் தங்களின் வேலையைப் பார்ப்பதற்குப் பதிலாக, பிறரின் சாதனைகளைப் பொய்யாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைகிறார்கள். நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி தனது பணியை நேர்மையாகச் செய்து, நோபல் பரிசு வென்றுள்ளார்.

இங்கு பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது. உங்கள் பணி பொருளாதாரத்தை முன்னேற்றுவதுதான். அதைவிடுத்து இவ்வாறு காமெடி சர்க்கஸ் நடத்துவது அல்ல" என்று பிரியங்கா காந்தி ட்விட்டரில் சாடியுள்ளார்

அதுமட்டுமல்லாமல், கடந்த செப்டம்பர் மாதமும் ஆட்டோமொபைல் துறை விற்பனை குறைந்ததற்கான அறிக்கையைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி இணைத்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x