Published : 18 Oct 2019 11:27 AM
Last Updated : 18 Oct 2019 11:27 AM

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

புதுடெல்லி

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக தற்போது ரஞ்சன் கோகய் இருந்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகயின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17-ம் தேதி முடிகிறது. வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் நவம்பர் 17-ம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதால், தனக்குப் பின் யாரை தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் எனப் பரிந்துரை செய்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் அரவிந்த் போப்டே : படம் உதவி ட்விட்டர்

அதில் தனக்குப் பின் தலைமை நீதிபதியாக வருவதற்கு மூத்த நீதிபதி சரத் அரவிந்த் போப்டே பெயரை, ரஞ்சன் கோகய் பரிந்துரை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ரஞ்சன் கோகய்க்கு அடுத்த இடத்தில் அதாவது 2-வது இடத்தில் போப்டே இருந்து வருகிறார். இவர் மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். போப்டேவின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி வரை இருக்கிறது

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கடந்த 1956-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தவரான போப்டே நாக்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 2000-ம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணியில் சேர்ந்து, அதன்பின் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உயர்ந்தார். அதன்பின் 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக போப்டே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x