Published : 17 Oct 2019 12:42 PM
Last Updated : 17 Oct 2019 12:42 PM

இந்தியாவில் முதல் முறை; வாடிக்கையாளர்களுடன் பேசி உணவு பரிமாறும் ரோபோக்கள்

புவனேஸ்வர்

நாட்டிலேயே முதன்முறையாக ஒடிசா உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களின் தேவையைக் கேட்டு உணவு பரிமாறும் ரோபோக்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். இந்த ரோபோக்கள் இந்தியாவிலேயே தயாரானது என்பது கூடுதல் சிறப்பு.

வீட்டிலேயே சாப்பிட்டு அலுத்துப்போன நமக்கு வெளியிலும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது அங்குள்ள பல்வேறு வகையான உணவு வகைகளை ருசி பார்ப்பதற்காக மட்டுமல்ல, அங்கு அமைந்திருக்கும் ஒரு வித்தியாசமான சூழ்நிலை, மரியாதைக்குரிய சர்வர்களின் விருந்தோம்பல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த அனுபவமாகும்.

வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதுமையான உணவு அனுபவத்தை வழங்கும் முயற்சியில், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தைச் சேர்ந்த உணவகம் ஒன்று ஈடுபட்டுள்ளது. அந்த உணவகம், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான உணவுகளை கேட்டு வழங்கும் வகையில் இரண்டு ரோபோ செஃப்களை நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் ஜீத் பாசா கூறியதாவது:

இந்த ரோபோக்களுக்கு சம்பா மற்றும் சாமேலி என்று பெயரிட்டுள்ளோம். அவை இரண்டும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டவை ஆகும். கிழக்கு இந்தியாவின் முதல் ரோபோ உணவகம் எங்களுடையதுதான். அதேபோல ரோபோவின் போக்குவரத்தை கவனித்துக்கொள்ள ஆள் தேவைப்படாத வகையில் இந்தியாவின் முதல் ரோபோ உணவகமும் இதுதான்.

அதற்குக் காரணம் ரேடார்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ரோபோக்கள் இயங்குவதுதான். அழைப்புகளுக்கேற்ப செயல்படும் இந்த ரோபோக்கள் குறிப்பிட்ட பாதைகளில் செல்கின்றன. மேலும் இந்த ரோபோக்கள் ஒடியா உட்பட எந்த மொழியிலும் பேசும் திறன் கொண்டவை.

இவை தவிர சாதாரணமாக வாடிக்கையாளர்களை வாழ்த்தவும், உணவு விடுதிக்கு அவர்களை வரவேற்பதற்கும் ரோபோக்களில் தானியங்கி குரல் இயக்கப்படும் வசதியையும் கொண்டுள்ளன.

சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ரோபோக்கள் பரிமாற, அவர்கள் புதுமையான நல்ல அனுபவத்தைப் பெறுகிறார்கள். உணவகத்தின் தனித்துவமான முயற்சிகளைப் பாராட்டிவிட்டுச் செல்கின்றனர்''.

இவ்வாறு ஜீத் பாசா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x