Published : 11 Oct 2019 05:02 PM
Last Updated : 11 Oct 2019 05:02 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை வரும் 14-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை வரும் 14-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அமலாக்கப்பிரிவு தரப்பில் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்று சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹெர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கின் சிபிஐ காவல் முடிந்து, நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி அமலாக்கப்பிரிவு தரப்பில் சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தனியாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டபோது, சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கும் வகையில், தாமாக முன்வந்து சிதம்பரம் அமலாக்கப்பிரிவிடம் சரண்அடைவதாக மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால், அப்போது நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனுவில் தேவைப்பட்டால் மட்டுமே சிதம்பரத்தை விசாரணைக்கு எடுப்போம், இப்போது அவர் விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால், ப.சிதம்பரத்தின் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குஹெர் தள்ளுபடி செய்தார். இதன் காரணமாக, சிபிஐ காவல் முடிந்து, நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை இருப்பதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம் ஆதலால் அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி அஜய் குமார் குஹெர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ப.சிதம்பரத்தை வரும் 14-ம் தேதி, நண்பகல் 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x