Published : 05 Oct 2019 02:51 PM
Last Updated : 05 Oct 2019 02:51 PM

ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவு: முன்னாள் தலைவர் அசோக் தன்வர் திடீர் விலகல்

புதுடெல்லி

ஹரியாணாவில் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முன்னாள் மாநிலத் தலைவர் அசோக் தன்வார் திடீரென காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் வரும் 21-ம் தேதி 90 தொகுதிகளுக்கு தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து வருகிறது.

ஆனால், வேட்பாளர்கள் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், பணம் பெற்றுக்கொண்டு தகுதியில்லாத வேட்பாளர்களை நியமிப்பதாகவும் முன்னாள் மாநிலத் தலைவர் அசோக் தன்வார் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை சோனியா காந்தி இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த தன்வார் கடந்த மாதம் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா நியமிக்கப்பட்டார்.

ரோடக் பகுதியைச் சேர்ந்த பூபேந்திர சிங் ஹூடாவின் பரிந்துரையால் தன்வார் மாற்றப்பட்டு, செல்ஜா நியமிக்கப்பட்டார். இதனால் ஹூடா தரப்புக்கும், தன்வார் தரப்புக்கும் இடையே பெரும் உட்கட்சிப் பூசல் இருந்துவந்தது. தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்குவதில் பாரபட்சம் காணப்பட்டதால் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்வார் விலகியுள்ளார்.

தனது விலகல் குறித்து 4 பக்க அளவில் கடிதம் எழுதி காங்கிரஸ் தலைமைக்கு அசோக் தன்வார் அனுப்பி வைத்து, அந்தக் கடிதத்தையும் ட்வி்ட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் தன்வர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சி தனது அரசியல் எதிரிகளால் சிக்கல்களைச் சந்திக்கவில்லை. தனது இருப்பிலேயே பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. கட்சிக்குள் உள்ளார்ந்த வகையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.

நான் ரத்தமும், வியர்வையும் சிந்தி வளர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் இந்த முடிவை பலமாதங்கள் ஆய்வுக்குப் பின்புதான் எடுத்துள்ளேன்.

என்னுடைய போராட்டம் தனிப்பட்ட எனக்கானது அல்ல. காங்கிரஸின் அமைப்பு முறைக்கு எதிராகத்தான். இந்த அமைப்பு முறைதான் காங்கிரஸ் கட்சியை அழித்து வருகிறது. என்னுடைய ஆதாரவாளர்களுடன் பேசித்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x