Published : 05 Oct 2019 01:56 PM
Last Updated : 05 Oct 2019 01:56 PM

காஷ்மீரில் வீட்டுக் காவலில் இருக்கும் அரசியல் தலைவர்கள் விரைவில் விடுவிப்பு: பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் உறுதி

பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் ஹைதராபாத்தில் பேசிய காட்சி | படம்: ஏஎன்ஐ

ஹைதராபாத்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களின் அரசியல் பணியைத் தொடர்வார்கள் என்று பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் உறுதியளித்தார்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, 370-வது பிரிவு நீக்கப்பட்டது தொடர்பாக பாஜக சார்பில் மக்களிடம் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

"ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சிக்கு முடிவுக்கு வந்து, சட்டப்பேரவை செயல்படத் தொடங்கியதும், அரசியலமைப்பின்படி எஸ்சி,எஸ்டி ஆணையம், மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் நல ஆணையம் முறைப்படி செயல்படத் தொடங்கும்.

ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு என்பது 70ஆண்டுகளாக இருந்து வரும் புற்றுநோய். அந்த நோயை பிரதமர் மோடி 70 மணிநேரத்தில் நீக்கிவிட்டார்.

காஷ்மீர் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் வராமல் தடுக்க 200 முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தபின், இப்போது அமைதியாக இருந்து வருகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் காஷ்மீரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தவறான தகவலும், வதந்தியாக மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. நான் உங்களுக்குச் சொல்கிறேன். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 200 தலைவர்கள் மட்டுமே அவர்களின் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் தடுக்க செய்யும் முன்னேற்பாடு நடவடிக்கையாகும். இதைக் கைது என நினைக்கத் தேவையில்லை. 5 நட்சத்திர ஓட்டலில் தொலைக்காட்சி, புத்தகங்கள், ஏ.சி. என சகலவசதிகளுடன் அரசியல் கட்சித் தலைவர்கள் சொகுசாக இருக்கிறார்கள். சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவே 200 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை நீண்ட நாட்களுக்கு வீட்டுக் காவலில் வைக்கப்போவதில்லை. விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதன்பின் அவர்கள் வழக்கமான அரசியல் பணிகளில் ஈடுபடலாம்.

லடாக் தனியாக யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின், அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்தியாவுடன் ஒருங்கிணைந்துவிட்டதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பிரச்சினைகள் உணர்வுபூர்வமான முறையில் தீர்க்கப்படு்ம.

சர்வதேச அமைப்பைச் சேர்ந்த எந்தவிதமான நபர்களும் காஷ்மீருக்கு வரவில்லை. ஆய்வு நடத்தவும் இல்லை. தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் நடக்கவில்லை.

கடந்த ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் எந்தவிதமான தனியார் முதலீடுகளும் வரவில்லை. ஏனென்றால் 370-வது பிரிவு தனியாரையும், தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்கவில்லை".

இவ்வாறு ராம் மாதவ் பேசினார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x