Published : 05 Oct 2019 07:09 AM
Last Updated : 05 Oct 2019 07:09 AM

திருப்பதி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் ஏழுமலையான் திருவீதியுலா

என்.மகேஷ்குமார்

திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாளான நேற்றிரவு, கருட வாகனத்தில் ஏழுமலை யான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாளான நேற்றிரவு முக்கிய வாகனமான கருட வாகன சேவை மிகவும் கோலாகல மாக நடைபெற்றது. கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழாவில் தினமும் உற்சவரான மலையப்பர் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர் களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ள இவ்விழாவில், 5-ம் நாளான நேற்று காலை மோகினி அவதார ஊர்வலம் நடைபெற்றது. கோயிலில் இருந்து  கிருஷ்ணருடன் மோகினி அலங்காரத்தில் மலையப்பர் புறப்பாடு நடந்தது. 4 மாட வீதிகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனை தொடர்ந்து நேற்றிரவு 7 மணிக்கு கருட வாகன சேவை நடைபெற்றது. வாகன மண்டபத்தில் தங்க கருட வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்த கோஷமிட்டனர். பின்னர் 4 மாட வீதிகளில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வழி நெடுகிலும் மாட வீதிகளில் பக்தர்கள் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.

கருட சேவையையொட்டி திருமலை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. 5000 போலீஸார் மற்றும் தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள், ஊழியர்கள், ஊர்காவல் படையினர் என திருமலை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு கள் பலப்படுத்தப்பட்டிருந்தது. தீவிரவாதி களின் அச்சுறுத்தல் இருப்பதால் இம் முறை வழக்கத்தை விட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக எஸ்பி அன்புராஜன் தெரிவித்தார். 1,600 கண்காணிப்பு கேமராக் கள் மூலம் திருமலை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

கருட சேவையையொட்டி வியாழக் கிழமை இரவு 11 முதல் திருமலைக்கு இரு சக்கர மோட்டார் பைக்குகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் வழக்கம் போல் பைக்குகள் அனுமதிக்கப்படுமென போலீஸார் கூறியுள்ளனர். மாட வீதிகளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் காலை முதலே காத்திருக்க தொடங்கி விட்டனர். மேலும், 2 லட்சம் பக்தர்கள் கருட சேவையில் பங்கேற்றதால் மொத்தம் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கருட சேவை யில் பங்கேற்றிருப்பார்கள் என கருதப் படுகிறது. இவர்களுக்கு இலவச அன்னதானம், குடிநீர், சிற்றுண்டி, மோர், டீ, காபி போன்றவற்றை தேவஸ்தானத் தினர் வழங்கினார். திருப்பதி - திருமலை இடையே 24 மணி நேரமும் போக்குவரத்தும் நடைபெற்றது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் நேற்று மட்டும் 6,200 முறை திருப்பதி, திருமலை இடையே ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

இரவு 7 மணிக்கு தொடங்கிய கருட சேவை தொடர்ந்து 5 மணி நேரம் வரை நீடித்தது. நள்ளிரவு 1 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்த ஊர்வலத்தால் விடிய, விடிய பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் இரவு 1.30 மணி வரை பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. பிரம் மோற்சவ விழாவின் 6-ம் நாளான இன்று காலை ஹனுமன் வாகனமும் மாலை தங்க தேரோட்டமும், இரவு யானை வாகன சேவையும் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x