Published : 29 Jul 2015 08:16 AM
Last Updated : 29 Jul 2015 08:16 AM

ராமேசுவரத்தில் கலாம் உடல் வியாழக்கிழமை நல்லடக்கம்: இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தீவிரம்

தலைநகரில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் திரண்டு அஞ்சலி

*

மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் மேகால யாவில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கலாமின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தெரிகிறது.

மேகாலயா தலைநகர் ஷில்லாங் கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பங்கேற்றார். மாலை 5.40 மணிக்கு அவர் விழாவுக்கு சென்றார். 6.30 மணிக்கு உரையாற்றத் தொடங்கினார். அடுத்த சில நிமிடங்களில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர், உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவரை பரிசோ தித்த டாக்டர்கள், கலாம் மாரடைப் பால் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தத் தகவலை மருத்துவமனை நிர்வாகம் இரவு 7.45 மணிக்கு வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து கலாமின் உடல் ஷில்லாங்கில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கிருந்து நேற்று காலை அவரது உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அசாம் மாநிலம் குவாஹாட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேகாலயா ஆளுநர் சண்முகநாத னும் உடன் சென்றார்.

குவாஹாட்டி ராணுவ விமான தளத்தில் அசாம் முதல்வர் தருண் கோகாய், உயரதி காரிகள் உள்ளிட்டோர் கலாமின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து இந்திய விமானப் படையின் சி-130 ஹெர்குலிஸ் விமானம் மூலம் டெல்லிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

பிரணாப், மோடி அஞ்சலி

டெல்லி பாலம் விமானப் படை தளத்தில் மதியம் 12.15 மணிக்கு ஹெர்குலிஸ் விமானம் தரையிறங்கியது. அப்போது 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. மூவர்ணக் கொடி போர்த்தப் பட்டிருந்த கலாமின் உடலை முப்படை வீரர்கள் சுமந்து வந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் வைத்தனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் பாலம் விமான தளத்துக்குச் சென்று கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி, விமானப் படை தளபதி அரூப் ரஹா, கடற்படைத் தளபதி ஆர்.கே.தோவல், ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

பின்னர், கலாமின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு, பாலம் விமான நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் எண் 10 ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக் கான மக்கள் சாலையின் இருபுற மும் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பிரபலங்கள் இறுதி அஞ்சலி

வீட்டில் வைக்கப்பட்டிருந்த கலாம் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மனோகர் பாரிக்கர், ஹர்ஷவர்தன், ஜிதேந்திர சிங், ரவிசங்கர் பிரசாத், பாஜக தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் எம்.பி.க்கள் உட்பட ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

மாலை 4 மணி முதல் கலாமின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அந்த மாமனிதருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நாளை இறுதிச் சடங்கு

அப்துல் கலாமின் உறவினர்கள் கோரிக்கையை ஏற்று, அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் இறுதிச் சடங்குகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கலாமின் உடல் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் ராமேசுவரம் கொண்டு வரப்படு கிறது. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கலாம் உடல் வைக் கப்படுகிறது. இன்று பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நாளை காலை 10.30 மணி அளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிது. இதையடுத்து, ராமேசுவரத்தில் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடு களை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இறுதிச் சடங்கில் பிரதமர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கியப் பிரமுகர்கள் பலர் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

மோடி வருகிறாரா?

அப்துல் கலாமின் உடலுக்கு டெல்லியிலேயே பிரதமரும், குடியரசுத் தலைவரும் அஞ்சலி செலுத்திவிட்டனர். இருப்பினும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க மோடி ராமேசுவரம் வருவார் என்று கூறப்படுகிறது. இதை கலாமின் பேரன் ஷேக் சலீமும் உறுதிப்படுத்தியுள்ளார். மண்டபம் அகதிகள் முகாம் அருகே உள்ள பழைய ஹெலிபேடு முழுவீச்சில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, ‘‘முக்கியப் பிரமுகர்கள் பலர் வருகை தர உள்ளனர். எனவே, இங்கு 5 ஹெலிபேடுகள் தயார் நிலையில் வைக்கப்படும். இன்று முதல் 3 நாட்களுக்கு ராமேசுவரம் தீவில் மட்டும் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்’’ என்றார்.

தமிழகத்தில் நாளை பொது விடுமுறை

தமிழக பொதுத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஷில்லாங்கில் 27-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் ராமேசுவரத்தில் அடக்கம் செய்யப்படும் 30-ம் தேதி பொது விடுமுறை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, 30-ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்கு:

அப்துல் கலாமின் உடல், ராமேசுவரத்தில் இஸ்லாமிய முறைப்படி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கே.நந்தகுமார் கூறும்போது, "கலாமின் உடலை சுமந்து வரும் விமானம் டெல்லியிலிருந்து புதன் கிழமை (இன்று) காலை புறப்படுகிறது. பிற்பகல் 1 மணிக்கு அவரது உடல் ராமேசுவரம் வந்து சேரும். அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் வைக்கப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். ராமேசுவரம் பேக்கரும்பு கிராமத்தில் அவரது உடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படும்" என்றார்.

கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறும்போது, "கலாமின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் வேகமாக செய்து வருகிறது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆந்திரா உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x