Published : 03 Oct 2019 04:39 PM
Last Updated : 03 Oct 2019 04:39 PM

பாகிஸ்தானின் கர்தார்பூர் குருதுவாராவுக்கு மன்மோகன் சிங் செல்கிறார்: பஞ்சாப் முதல்வர் தகவல் 

புதுடெல்லி

பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் கர்தார்பூர் சாஹிப் குருதுவாராவுக்கு, அனைத்துக் கட்சிக் குழுவுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் வருவதற்கு சம்மதித்துள்ளார் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்குப் பின் இந்தத் தகவலை அமரிந்தர் சிங் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஆகியோரும் சீக்கிய குரு குருநானக்கின் 550-வது பிறந்த நாளுக்கு கர்தார்பூர் வரவேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடியையும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் தனித்தனியே சந்தித்துப் பேசி முதல்வர் அமரிந்தர் சிங் அழைப்பு விடுத்தார்.

இந்தச் சந்திப்பு முடிந்த பின் நிருபர்களிடம் முதல்வர் அமரிந்தர் சிங் கூறுகையில், "பாகிஸ்தான் பேசி முடிக்கப்பட்ட நிலையில் கர்தார்பூரில் இருக்கும் சீக்கிய குரு குருநானக்கின் நினைவிடத்தில் கொண்டாடப்படும் 550-வது பிறந்த நாள் விழாவுக்கு வருகை தர பஞ்சாப் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் அழைப்பு விடுத்தோம். இருவரும் அழைப்பை ஏற்றுக்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சி நிரல்கள் குறித்த விஷயங்களை இருவரிடமும் பகிர்ந்துள்ளோம். அவர்களின் சூழலைப் பொறுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கர்தார்பூர் செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளதாக முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பஞ்சாப் முதல்வரின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் பதிவிட்ட கருத்தில் " முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கர்தார்பூர் குருதுவாராவுக்கு வரும் நவம்பர் 9-ம் தேதி செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவுடன் செல்ல சம்மதித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, பாகிஸ்தானின் கர்தார்பூரில் நானாகானா சாஹிப் பிறந்த இடத்துக்கு முன்கூட்டியே சிறப்பு அனைத்துக் குழுக்களை அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

நானாகானா சாஹிப் இடத்தில் புனித நூல் குறித்த வாசகங்களை படிப்பதற்கு 21 பேர் கொண்ட குழுவை வரும் 30-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் அமரிந்தர் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நானாகா சாஹிப் குழுவுக்கு முறைப்படியான அனுமதியை பாகிஸ்தானிடம் இருந்து பெற்றுத்தரக் கோரியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் அமரிந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் குருத்வாரா அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தின் தேரா பாபா நானக் பகுதியிலுள்ள குருத்வாராவையும், கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையிலும், இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இன்றி புனிதப் பயணம் மேற்கொள்ளவும் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x