Published : 03 Oct 2019 02:54 PM
Last Updated : 03 Oct 2019 02:54 PM

ஹரியாணாவில் நோட்டாவுக்கு குறைந்து வரும் செல்வாக்கு

புதுடெல்லி

அக்டோபர் 21-ல் சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்கும் ஹரியாணா மாநிலத்தில் நோட்டா வாக்குகளுக்கு செல்வாக்கு சரிந்து வருகிறது. எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க விரும்பாதவர்கள் வாக்களிப்பதையே புறக்கணிப்பதாகக் கருதப்படுகிறது.

ஒரு பொதுநல வழக்கில், அனைத்து தேர்தலிலும் நோட்டா எனும் பெயரில் ‘யாருக்கும் வாக்கு இல்லை’ என்ற முறையை அறிமுகப்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டில் வாக்காளர்கள் அதிக விழிப்புணர்வு பெறும்வகையில் நோட்டாவுக்காக தனியாக ஒரு சின்னத்துடன் பொத்தானை, ஓட்டு இயந்திரங்களில் அறிமுகப்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

முதன்முறையாக கடந்த டிசம்பர் 4, 2013-ல் நடைபெற்ற தமிழகத்தின் ஏற்காடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் இடைத்தேர்தலில் நோட்டா முறை அமலாக்கப்பட்டது. இதன் பிறகு நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் விரும்புபவர்கள் அதில் வாக்களிக்கும் வகையில் நோட்டாவுக்காக வாக்கு இயந்திரத்தின் கடைசி பொத்தானாகப் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நோட்டாவுக்கான வாக்குகள் எண்ணிக்கை கூடியபடி உள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தமைக்கு நோட்டா வாக்குகளே காரணமாகக் கருதப்பட்டது.

தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் நோட்டாவை விடக் குறைவாக இருந்தன. இந்தச் சூழலில் நோட்டாவை அறிமுகப்படுத்தியதில் இருந்து ஹரியாணா மாநிலத்தில் நோட்டாவுக்குப் பதிவாகும் வாக்குகள் குறைந்து வருகின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி கடந்த 2014-ம் ஆண்டில் முதன்முறையாக நாடு முழுவதிலும் மக்களவைத் தேர்தலில் அறிமுகமான நோட்டாவுக்காக 1.04 சதவிகித வாக்குகள் பதிவானது. இதில், ஹரியாணாவில் நோட்டாவின் எண்ணிக்கை 34,225 வாக்குகளுடன் 0.30 சதவீதமாக இருந்தது.

அப்போது, ஹரியாணாவின் மொத்த வாக்காளர்கள் 1.61 கோடி. இதில், 45.9 லட்சம் வாக்காளர்கள் அந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முன்வரவில்லை. அதே வருடம் நடைபெற்ற ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலில் நோட்டாவுக்கான எண்ணிக்கை 0.4 சதவீதத்தில் 53,613 வாக்குகள் என உயர்ந்தது.

இதில், 38.9 லட்சம் வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்கவில்லை. இந்தத் தேர்தலில் ஹரியாணா மாநில வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்து 1.63 கோடியாக உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கான வாக்காளர்கள் 41,781 எண்ணிக்கையில் 0.33 சதவீதமானது. இந்தத் தேர்தலிலும் வாக்காளிக்காதவர்கள் எண்ணிக்கை உயர்ந்து 53.7 லட்சம் என்றானது. அப்போது ஹரியாணா வாக்காளர்கள் எண்ணிக்கையும் 1.80 கோடியாக உயர்ந்திருந்தது.

கடந்த ஜனவரியில் ஹரியாணாவில் நடைபெற்ற ஜிந்த் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான நோட்டா வாக்குகள் 345 ஆகும். இது மொத்த எண்ணிக்கையில் 0.26 சதவீதம் மட்டுமே. ஹரியாணாவில் நோட்டாவுக்கான செல்வாக்கு சரிந்து வருவதையே இது காட்டுகிறது.

எனவே, அக்டோபர் 21-ல் வரும் ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலில் நோட்டாவுக்கான வாக்குகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.ஷபிமுன்னா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x