Published : 29 Sep 2019 12:20 PM
Last Updated : 29 Sep 2019 12:20 PM

சுற்றுலாவில் மாணவிகளிடம் அத்துமீறல்: பல்கலை. பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு

வாரணாசி,

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகப் பேராசியர் ஒருவர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதை அடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் எஸ்.கே.சாவ்பே மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவத்தில் பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக செய்தித் தொடர்பளார் ராஜேஷ் சிங் கூறியதாவது:

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபரில் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவ மாணவிகள் புனேவுக்கு சுற்றுலா சென்றனர். அவர்களுக்கு துணையாக சில பேராசிரியர்களும் உடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதில் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பிரிவு பேராசியரான எஸ்.கே.​​சாவ்பேவும் ஒருவர். சுற்றுலாவின்போது சாவ்பே மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதால் மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பயணத்த சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியதும் பேராசிரியரின் தவறான அணுகுமுறை பற்றி அவருக்கு எதிராக புகார் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

புகாரைத் தொடர்ந்து சாவ்பே இடைநீக்கம் செய்யப்பட்டார், துணைவேந்தர் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பல்கலை.யின் உள் புகார்கள் குழுவை (ஐ.சி.சி) கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஜூன் மாதத்தில், பல்கலைக்கழகத்தன் செயற்குழு சாவ்பே தொடர்ந்து பணியாற்றுவதற்கு தடை உள்ளிட்ட இடைநீக்கத்தை ரத்து செய்தது,

இதன் பிறகு அவர் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு பணியாற்ற வரத் தொடங்கினார். குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டம்பர் 14 அன்று மாணவர்கள் பல்லைக்கழகத்தின் பிரதான வாயிலில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். மேலும் அவரை வேலையைவிட்டு நீக்கக் கோரி வளாகத்தில் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டாய ஓய்வு

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் தூதுக்குழு துணைவேந்தரை சந்தித்த மறுநாளே அவர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர், மேலும் பேராசிரியரை மீண்டும் பணியில் அமர்த்தப்படும் விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய நிர்வாக சபைக்கு பரிந்துரைக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது.

நேற்று (சனிக்கிழமை) புதுடெல்லியில் நடைபெற்ற பல்கலைக்கழக செயற்குழு கூட்டத்தில் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு துணைவேந்தர் பேராசிரியர் ராகேஷ் பட்நகர் தலைமை தாங்கினார்.

மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் சாவ்பே நீண்ட விடுப்பில் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ உத்தரவுகள் எதுவும் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.

இவ்வாறு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x