Published : 27 Sep 2019 09:02 PM
Last Updated : 27 Sep 2019 09:02 PM

அமைதியும் சமாதானமுமே உலகிற்கான இந்தியாவின் செய்தி; இந்தியா உலகிற்கு புத்தரை அளித்தது போரை அல்ல: ஐ.நா.வில் பிரதமர் மோடி உரை

ஐ.நா. பேரவையில் உரையாற்றிய பிரதமர் மோடி அமைதியும் சமாதானமுமே உலகிற்கான இந்தியாவின் செய்தி, பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியா உலகிற்கு அளித்தது புத்தரைத்தான் போரை அல்ல, என்று பிரதமர் மோடி தன் உரையில் குறிப்பிட்டார்.

மனித சமூகத்திற்காக உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும், உலகின் முகம் மாறிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் பல்வேறுபட்ட புலங்களில் தொழில்நுட்பம் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் பிரிந்து கிடக்கும் உலகம் யாருடைய நலனுக்கானதாகவும் இருக்க முடியாது என்றார் மோடி.

அவர் பேசியது வருமாறு:

உலகின் பெரிய ஜனநாயக நாடு, எனக்கு ஆதரவாகவும், எனது அரசிற்கு ஆதரவாகவும் ஒட்டு அளித்தது. 2019 தேர்தலில், மக்கள் மகத்தான தீர்ப்பு அளித்தனர். இங்கு பேசுவது பெருமை அளிக்கிறது. 130 கோடி இந்தியர்கள் சார்பாக பேசுகிறேன். மஹாத்மா காந்தியின் கொள்கைகள் இன்றும் சரியாக பொருந்துகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டியுள்ளோம். தூய்மை இந்தியா திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு வர வேண்டும்.

இந்தியாவில் மிகப்பெரிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மூலம் அடையாளபடுத்தப்படும் திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தப்படுகின்றன.இந்தியாவின் நிதிசார்ந்த திட்டங்கள் உலகத்திற்கு உதாரணமாக உள்ளன. இங்கு வரும் போது, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் ஐ.நா., சபை சுவர்களில் பார்த்தேன். இந்தியாவிலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அடுத்த 5 ஆண்டுகளில் நீர் சேமிப்பில் கவனம் செலுத்த உள்ளோம். 2 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டப்படும். 15 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், 2025க்குள் காசநோய் ஒழிக்கப்படும். சர்வதேச சவால்களை இந்தியா சமாளித்து வருகிறது.சிறந்த திட்டங்களுக்காக கூட்டு நடவடிக்கையை நாங்கள் நம்புகிறோம். 37 கோடி ஏழை மக்கள் வங்கி கணக்குகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளை தொலை தொடர்பு மூலமாக இணைக்க திட்டம் உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பண்பாடு இந்தியப் பண்பாடு. இந்தியாவின் வளர்ச்சி, வளரும் நாடுகளுக்கு உதாரணம். வளரும் நாடுகளுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம. அனைத்து மக்களையும் , எங்கள் மக்களாக கருதுகிறோம். புது இந்தியா பன்னாட்டு நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும். எங்கள் நாட்டின் வளர்ச்சியே எங்களுடைய கனவு. எங்கள் நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என 3000 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாடு கூறியது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. இதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் இந்தியாக முன்னிலையில் உள்ளது. பருவநிலை மாற்றத்தால், சர்வதேச அளவில் பேரிடர் ஏற்படுகிறது. 'பருவநிலையை காப்போம் ' என்ற கூட்டணியில் அனைவரும் இணைய வேண்டும். சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்த திட்டங்கள் தீட்டி இருக்கிறோம். புவி வெப்பமயமாதலை தடுப்பதை நினைவில் கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம்.

உலகிற்கு இந்தியா போரை அளிக்கவில்லை புத்தரைத்தான் அளித்தது. அதனால்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான எங்கள் குரல் உலகிற்கு இந்தத் தீமை குறித்து எச்சரிக்கை செய்கிறது.

பயங்கரவாதம், குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு எதிரானது அல்ல. அனைத்து நாட்டிற்கும் எதிரானது என நாங்கள் நம்புகிறோம். மனித சமுதாயத்திற்கு பயங்கரவாதம் பெரிய சவாலாக உள்ளது. மனித நேயத்திற்காக அதனை எதிர்க்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் இணைய வேண்டும்.பயங்கரவாதத்தை அதிதீவிர கோபத்துடன் அணுகுவோம். ஐ.நா.,வின் அடிப்படை கொள்கைகளை பயங்கரவாதம் பாதிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் ஆதரவு அளித்து எங்களை காயப்படுத்தி வருகின்றன. அதே நேரம் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்.

இன்றைய தினம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உலகிற்கு அளிக்கும் செய்தி என்னவெனில் அமைதியும் சமாதானமுமே.

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x